மாதவிடாய் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விஷயங்களில் அசட்டையாக இருப்பதும் ஒரு வகையில் காரணமாக அமைந்திருக்கிறது. அதனை தவிர்க்க வேண்டியும், மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகிறார், அனுஸ்ரீ.
`மாதவிடாய் சாதாரணமானது என்பதுதான் இவரது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மைய கருத்தாக அமைந்திருக்கிறது. வெறுமனே விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு நின்றுவிடாமல், மாதவிடாய் காலத்தில் உபயோகப்படும் பொருட்களை பரிசு பெட்டகமாகவும் வழங்கி வருகிறார். அதில் சாரிட்டரி நாப்கின்கள், துணிகள், சானிடைசர், சோப் போன்ற பொருட்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த பரிசு பெட்டகத்தை தனது பெற்றோர் திலிப் குமார்- பாரதி மிஸ்ரா ஆகியோரின் உதவியோடு வழங்கி வருகிறார்.
அனு, ஒடிசா மாநிலத்திலுள்ள சுந்தர்கார் பகுதியை சேர்ந்தவர். ஒடிசாவை பொறுத்தவரை 69 சதவீத பெண்கள் மாதவிடாய் காலங்களில் துணியையே பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் கிராமம், நகர்புறம் என்ற பாகுபாடின்றி பெண்களின் செயல்பாடு அமைந்திருக்கிறது. கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் 30 சதவீத பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தேசிய குடும்ப நல சர்வே அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்திலும் மாதவிடாய் பற்றி பேசுவதை தவிர்க்கும் வழக்கம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருக்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற முனைப்போடு களப்பணி ஆற்றி வருகிறார், அனுஸ்ரீ. அதற்கான காரணத்தையும் விளக்குகிறார்.
கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் கிராமப்புற சிறுமிகள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை சந்தித்து மாதவிடாய் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சானிட்டரி நாப்கின்களை பேப்பரில் சுற்றி பின்னர் அதனை கறுப்பு வண்ண பாலீத்தின் பைகளில் வாங்கி பயன்படுத்துவதற்கு பழகிப்போன பெண்கள் இன்றைக்கும் மாதவிடாய் பற்றி பேசத் தயங்குகிறார்கள்.
மாதவிடாய் என்பது பெண்ணின் உடலுக்குள் நடக்கும் இயற்கை நிகழ்வாகும். இதனை கதவை மூடிக்கொண்டு ரகசியமாக வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நகர்ப்புற குடிசை பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிடத்தில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாதவிடாய் காலங்களில் இடையூறு இல்லாத வாழ்க்கையை அவர்கள் நடத்துவதற்கான நிலையான தீர்வை வழங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளேன் என்கிறார்.