கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் தோற்றம்
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, நம் முன்னோர்கள் பலரின் தியாகத்தால் கிடைத்தது. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் நம் பெருமைகள் பல சிதைக்கப்பட்டு, அவை தடம் மாற்றப்பட்ட நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன. அப்படியொரு நிகழ்வை தான் இங்கே பார்க்கப்போகிறோம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கை கொண்ட சோழபுரம். சோழ சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்தியாக விளங்கிய ராஜராஜ சோழன் தஞ்சையில் வரலாற்று சிறப்புமிக்க பெரிய கோவிலை கட்டியதைப்போன்று, அவரது மகனான ராஜேந்திர சோழன் கலைநயமிக்கதாக பிரகதீஸ்வரர் கோவிலை இங்கே கட்டி எழுப்பினான். இதுவும் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது.
வளமிக்க ஒரு நாடு மாற்றான் கையில் அகப்படும்போது, அங்குள்ள மக்கள் அடிமைப்படுத்தப்படுவர் அல்லது அகதி களாக்கப்படுவர். அந்த நாட்டின் இயற்கை வளம், செல்வ வளம் சுரண்டப்படும், பெருமைக்குரிய சின்னங்கள் சிதைக்கப்படும் என்பதாகத்தான் வரலாறுகள் பதிவாகியுள்ளன. இதற்கு கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலும் விதிவிலக்கல்ல.
சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பே சோழ மன்னரான கரிகால் பெருவளத்தான், காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையை கட்டி, அங்கு தண்ணீரை தேக்கி, தஞ்சை உள்ளிட்ட பகுதிக்கு பாசன வசதி ஏற்படுத்தினார். இன்றளவும் தமிழரின் நீர் மேலாண்மையை பறைசாற்றும் விதமாக கல்லணை கம்பீரமாக காட்சியளிக்கிறது.
19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின்போது, திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே காவிரியில் இருந்து கொள்ளிடம் பிரியும் இடத்தில் மழை காலங்களில் வரும் அதிகப்படியான நீர் வீணாகாமல் இருக்க, தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணி, ஆர்தர் காட்டன் என்ற ராணுவ பொறியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் செங்கற்களால் ஆன மேலணையை கட்டத் தொடங்கினார்.
மேலணையில் இருந்து வரும் கொள்ளிடம் ஆறு, தற்போதைய அரியலூர் மாவட்டம் அணைக்கரையில் இரண்டாவதாக பிரிவதை அறிந்தார். எனவே அங்கும் ஒரு தடுப்பணையை கட்டி நீரை சேமித்தால், புதுச்சேரி பகுதிகளுக்கும் பாசனத்திற்கு தண்ணீர் அனுப்ப முடியும் என்று நினைத்த பொறியாளர், அணைக்கரையில் கீழணை கட்ட முடிவுசெய்தார்.
அப்போது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலை பார்த்த பொறியாளருக்கு, அதில் உள்ள கற்களை, கீழணையைக் கட்ட பயன்படுத்தும் எண்ணம் தோன்றியது. இதற்காக கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள மதில் சுவர் மற்றும் இரண்டடுக்கு மண்டப கற்களை பிரித்து எடுத்து கீழணை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தினார்.
கோவில் கற்களால் அமைக்கப்பட்ட கீழணை
முக்கொம்பு கொள்ளிடத்தில் கட்டப்பட்ட மேலணை, கடந்த 2019-ம் ஆண்டு வந்த அதிக நீரினால் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தது. ஆனால் பிரகதீஸ்வரர் கோவில் கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட கீழணை இன்றுவரை எந்த சேதமும் அடையவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் குறைவாக உள்ளபோது, அணையில் உள்ள கற்களில் அந்த காலத்தில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துகள் உள்ளதை தற்போதும் காணலாம்.
சுதந்திரத்திற்கு பின்னர் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிற்குள் கோவில் கொண்டு வரப்பட்டு, பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் காலத்தில், கற்கள் பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் கோவில் பகுதிகளிலும் அந்த நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.