மலேரியா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும் மலேரியாவை முற்றிலும் அழித்துவிட முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அதில் ஒரு மைல்கல்லாக சமீபத்தில் மலேரியாவை தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.
உலக மலேரியா தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி ஆப்பிரிக்கா நாடான மலாவியில் முதன் முதலாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாற்றம் ஏற்படும்போது கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிப்பதால் மலேரியா, டெங்கு மற்றும் ஜிகா வைரஸ் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகிறது. அதிலும் மலேரியாதான் அதிக அளவில் உடல் நல பாதிப்பையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் கொடிய நோயாக இருக்கிறது. அதனால் நோய் பாதிப்புக்கான சில அறிகுறிகள் தென்பட்டால் உடனே சிகிச்சை பெற வேண்டியது அவசியமானது.
தற்போது பரிசோதிக்கப்பட்டிருக்கும் இந்த தடுப்பூசி மலேரியாவை தடுக்கும் தன்மை கொண்டது என்கிறார்கள். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள்தான் மலேரியா நோய் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் அதிகம் இருக்கிறது. அதனால் பெற்றோர் குழந்தைகளை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது.
கொசுக்களின் இனப்பெருக்கம் அதிகரிக்கும் காலங்களில் குழந்தைகள் முழு கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து கொள்வது நல்லது. கொசு விரட்டி சுருள், ஸ்பிரே, கொசுவலை படுக்கைகள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் வெளியில் தூங்குவதும், ஜன்னலை திறந்து வைப்பதும் கூடாது. கொசுக்கள் ஆதிக்கம் செலுத்தும் காலங்களில் இரவு நேரங்களில் குழந்தைகளை வெளியே விளையாட அனுமதிக்காதீர்கள்.