அரசு சாலை விதிகளை கடுமையாக்கி சட்ட திருத்தங்கள் செய்த போதும் வாகனம் செலுத்துபவர்கள் சரிவர அதனை பின்பற்றுவதில்லை. அதனால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாள் தோறும் கூடி வருகிறது. மோட்டார் வாகனச் சட்டம் 1939-ம் ஆண்டு இயற்றப்பட்டு, 88-ம் ஆண்டு திருத்தத்துடன் 89-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வாகன விபத்து ஏற்பட்டால், இழப்பீடு பெற 1959 முதல் வாகன விபத்து தீர்ப்பாயங்களும் தோற்றுவிக்கப்பட்டு விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு சட்டப்படி இழப்பீடு பெற அரசே துணை நிற்கிறது. உலகெங்கிலும் ஒரு கோடி பேருக்கு மேல் விபத்தால் உடல் ஊனம் மற்றும் காயங்கள் ஏற்படுத்திக்கொள்வதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அறிவியல் பொருளாதார வளர்ச்சியின் விளைவா அல்லது மனித இனத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமா? புரியவில்லை!
வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவு, பொறுமையின்மை, சாலைவிதிகளை அலட்சியப்படுத்துதல், அதிக வேகம் ஆகியவை விபத்திற்கு காரணங்களாய் அமைகின்றன. எடுத்துக்காட்டாக 40 கி.மீ. வேகத்தில் செல்லும் வாகனம் திடீரென்று நிறுத்தப் படும் போது, அந்த வாகனத்தில் வெளிப்படும் உந்து விசையால் வாகனத்தை சுமார் 8 அடி தூரம் இழுத்துச்சென்று, பின்னர் தான் இயங்குவது நிற்கும். இது அறிவியல் உண்மை. வாகனத்தின் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க உந்து விசையின் தூரமும் அதிகமாகும். அதனால் தான் அரசு ஊர்திகளின் பின்புறம் 30 மீட்டர் இடைவெளி விட்டு தொடரவும் என்ற அறிவிப்பு எழுதப்பட்டிருக்கும். அலட்சியமாக அதை கவனிக்காது அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் மோதி நெடுஞ்சாலை விபத்தில் சிக்குகின்றன.
ஓடும் வாகனத்தை இடது புறமாக முந்துதல், எதிரே வரும் வாகனத்திற்காக, முகப்பு வெளிச்சத்தை குறைத்து, கூட்டி வழி விடாதுசெல்வது, கண் பார்வை மறைவு வளைவில் ஒலி எழுப்பாது திரும்புதல் போன்ற அலட்சிய மனோபாவத்தாலும் விபத்து நேரிடுகிறது.
மனித உயிர் விலை மதிக்க முடியாதது. அதனால் வாகனம் இயக்கும் போது விதிகளை கடைப்பிடிப்பது அவரவர் கடமையாகும். இது ஒரு பொது ஒழுங்கு நியதியாகும். தவிர்க்கும் போது தான் பிரச்சினை எழுகிறது. மோட்டார் வாகனச் சட்டப்படி யாரெல்லாம் வாகன விபத்தின் போது இழப்பீடு கோரலாம்?
விபத்தில் காயம் அடைந்தவர்கள்; சேதமடைந்த வாகனத்தின் உரிமையாளர்கள்; வாகன விபத்தில் உயிரிழந்தவரின் வாரிசுகள் அல்லது சட்டரீதியான பிரதிநிதிகள் ஆகியோர் இழப்பீடு பெறலாம். விபத்தில் தொடர்புடைய வாகன உரிமையாளரோ, ஓட்டுனரோ அல்லது வாகன காப்பீட்டு கழகமோ கூட்டாக இழப்பீட்டைக் கொடுக்க கடமைப்பட்டவராவர். விபத்து நேரிட்டால், விபத்தை ஏற்படுத்திய நபரோ அல்லது அதைப் பார்த்தவரோ ஆம்புலன்சை வரவழைத்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, போக்குவரத்து காவலருக்கும் தகவல் தரவேண்டும். தகவல் தெரிவிப்பவர் மீது எவ்வித நடவடிக்கையும் கிடையாது. போக்குவரத்து காவலர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரித்த பின்னர் விபத்தை ஏற்படுத்தியவர் மீது கிரிமினல் வழக்கும், விபத்தில் பாதிப்படைந்தவருக்காக சிவில் வழக்காகவும் பதிவு செய்வார். அதனால் விபத்தை ஏற்படுத்தியவர் மீது எக்காரணம் கொண்டும் வன்முறையில் ஈடுபட சட்டத்தில் இடமில்லை. விபத்தை ஏற்படுத்தியவர் சட்டப்படி பெயில் கோரி வழக்கு முடியும் வரை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவலருக்கு உதவியாக விபத்தில் தொடர்புடைய வாகன எண், ஓட்டுனர் பெயர், வயது, முகவரி மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை அளிக்க வேண்டும். குடிபோதையில், அதிவேகத்துடன் ஓட்டியவர்கள், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் அல்லது தகுதிக்குரிய வயது இல்லாமல் ஓட்டியவர்கள் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை தொடரப்படும்.
முதல் தகவல் அறிக்கை தயார் செய்த போக்குவரத்து காவலர், விபத்து நிகழ்ந்த எல்லைக்குட்பட்ட காவல்நிலையம் மூலமாக சார்பு நீதிமன்றம் அல்லது மாவட்ட நீதிமன்றம் அல்லது இழப்பீடு பெற தனியாக அமைக்கப்பட்ட தீர்ப்பாயம் ஆகிய ஏதேனும் ஒன்றில் 30 தினங்களுக்குள் இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்வார்.
நீதிமன்றமே நேரிடையாக விசாரணை செய்து விபத்தில் பாதித்தவரது வயது, வருமானம், பாதிப்பின் தன்மை பொருளாதார ரீதியான பாதிப்பா அல்லது மருத்துவ சிகிச்சை முடிந்து உடனடியாக பணிக்கு திரும்பும் வரையான பாதிப்பா அல்லது கை கால்கள் செயல்படா வண்ணம் உள்ள ஊனமான பாதிப்பா அல்லது மன ரீதியான பாதிப்பா என ஆய்வு செய்து விபத்துக்குள்ளானவரின் வருமான பாதிப்பு, ஊனமடைந்திருந்தால் பாதிப்பின் சதவீதம், போக்குவரத்து செலவினம், உட்கொண்ட மருந்து மாத்திரைகள் மற்றும் மருத்துவமனை செலவினங்கள் போன்றவற்றை கணக்கில் கொண்டு ஒரு தொகையை தீர்ப்புரைக்கும். அந்தத் தொகையை பாதிக்கப் பட்டவருக்கு வாகன உரிமையாளரோ அல்லது காப்பீட்டுக் கழகமோ வழங்க வேண்டும். இழப்பீடு தொகை போதுமானதாக இல்லையெனில் மேல்முறையீடு செல்லலாம். காப்பீடு செய்யப் படாத வாகனம் என்றால், வாகன உரிமையாளரே வழங்க வேண்டும். அவரால் இயலாது என்றால் வாகனத்தை ஏலம் மூலம் விற்பனை செய்து, பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும். அதிவேகமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என்பதை தவிர்த்து, சாலை விதிகளை மதித்து, விபத்தில்லா பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால் தான் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு!
- கே.சுப்ரமணியன், வக்கீல், சென்னை உயர்நீதி மன்றம்