சிறப்புக் கட்டுரைகள்

‘நெட் பவுலர்’ வாழ்க்கை எப்படி இருக்கும்?

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசிய அதிசய ராஜ் டேவிட்சன், இப்போது ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் நெட் பவுலராக சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர், நெட் பவுலரின் பணிகளை பற்றியும், சர்வதேச வீரர்களுடனான நட்பு பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

* உங்களை பற்றிய அறிமுகம்?

தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரத்தில்தான் பிறந்து வளர்ந்தேன். நான் படித்தது பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ். உடற்பயிற்சி கல்வியில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறேன்.

* கிரிக்கெட் உங்களுக்கு அறிமுகமானது எப்படி?

கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த எந்தவொரு சிறுவனுக்கும், ரப்பர் பந்து கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் இருக்கும். அதேபோலதான் ரப்பர் பந்து மூலமாக கிரிக்கெட் என் வாழ்க்கையில் அறிமுகமானது.

சிறுவனாக இருந்தபோது ரப்பர் பந்தில் நிறைய விளையாடியிருக்கிறேன். அதிவேகமாக பந்துவீசி அசத்தியிருக்கிறேன். அதனால் கல்லூரி கிரிக்கெட் அணியிலும் நம்பிக்கையான வேகப்பந்துவீச்சாளராக மதிக்கப்பட்டேன். அப்படி கல்லூரி அணிக்காக விளையாடிக்கொண்டிருந்தபோதுதான் எம்.செந்தில்நாதனை சந்தித்தேன். அவர் மூலமாகவே கிரிக்கெட் உலகில் நிறைய சாதிக்க முடிந்தது.

* கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்பம் தந்த தருணம் எது?

கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகளில் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் பந்துவீசியதை கவனித்த எம்.ஆர்.எப்.அணியின் ஹெட் கோச் செந்தில்நாதன் எனக்கு ஊக்கம் கொடுத்தார். அவருடைய எம்.ஆர்.எப்.பேஸ் பவுண்டேஷன் மூலமாக வேகப்பந்து வீச பயிற்சி கொடுத்து, அணியில் சேர்த்து கொண்டார். அதன் மூலமாக மாநில-தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தினேன். அதைதொடர்ந்து, டிவிஷன் அணியிலும், தமிழக ரஞ்சி கோப்பை அணியிலும் நெட் பவுலராக நுழையும் வாய்ப்பு கிடைத்தது. அதை சிறப்பாக பயன்படுத்தி கொண்டேன்.

இதற்கிடையில் டி.என்.பி.எல். போட்டிகளில் தூத்துக்குடி அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக பந்துவீசி, தமிழக கிரிக்கெட் அணிக்கு தேர்வாகினேன்.

* நெட் பவுலராக நுழைந்து, தமிழக அணிக்கு தேர்வானதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நெட் பவுலராக தேர்ந்தெடுக்கப்படவும், தனி திறமை வேண்டும். அணிக்கு ஏதாவது ஒரு வழியில் பயன்படும் வீரர்களைத்தான், நெட் பவுலராக சேர்த்து கொள்வார்கள். அந்தவகையில், நெட் பவுலராக தேர்வாகும் ஒவ்வொரு முறையும், என் பந்துவீச்சு திறமையின் மீதான நம்பிக்கை உயர்கிறது.

* இப்போது ஐதராபாத் அணியில் நெட் பவுலராக இணைந்திருக்கிறீர்கள். அங்கு உங்களுடைய பணி என்ன?

ஐதராபாத் அணி வீரர்களோடுதான், ஐ.பி.எல். தொடர் முழுக்க பயணிப்போம். அவர்களோடுதான் விளையாடுவோம். அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் வலை பயிற்சியில், ஈடுபட்டிருக்கும்போதும், அணியினர் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும்போதும் நாங்களும் அவர்களோடு இணைந்து விளையாடுவோம். அவர்களோடு சேர்ந்து பந்து வீசுவோம்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால், பேட்டிங் பயிற்சியின்போது புவனேஷ்வர்குமார், ரஷித், நடராஜன் போன்ற பிரபல வீரர்களோடு சேர்ந்து நாங்களும் பந்து வீசி, ஆட்டக்காரர்களுக்கு ஆட்டப்பயிற்சி கொடுப்போம்.

* நீங்கள் இலங்கை வீரர் மலிங்காவை போல பந்துவீசுவதாக கூறப்படுகிறது. அதுபற்றி?

உண்மைதான். நான் டி.என்.பி.எல். போட்டிகளில் பிரபலமானதற்கும் மலிங்கா பவுலிங் ஸ்டைல் ஒரு காரணம். மலிங்காவை போலவே கைகளை சாய்த்து, துல்லியமாக யார்கர் வகை பந்துகளை வீசியதில் நிறைய விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதனால்தான், ஐ.பி.எல். வரை வந்திருக்கிறேன்.

* பந்துவீச்சில் உங்களுடைய பலம் என்ன?

யார்க்கர் வகை பந்துகளை சிறப்பாக வீசுவேன். அதோடு வேகம் குறைந்த பந்துகளையும், அதிவேக பந்துகளையும் ஒரே ஓவரில் கலந்து வீசுவேன். குறிப்பாக இறுதி ஓவர்களில் ரன் அதிகம் கொடுக்காமல், ஆட்டத்தை முடித்து வைக்க ஆசைப்படுவேன். டி.என்.பி.எல். போட்டிகளில் இந்த ஆசையை பலமுறை நிறைவேற்றி இருக்கிறேன்.

* ஐதராபாத் அணியில் நெட் பவுலராக சேர்ந்த நடராஜன் இன்று இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார். இன்று நீங்களும் அதே அணியில், அதே நிலையில் இருக்கிறீர்கள். உங்களுக்கு எத்தகைய ஆசை இருக்கிறது?

எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும், ஆசை ஒன்றுதான். அது இந்திய அணிக்காக விளையாடுவது. அத்தகைய ஆசை, எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்காக நிறைய உழைக்கவேண்டும். நிறைய தடைகளை தாண்ட வேண்டும். அதற்காக உடலையும், மனதையும் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். அத்தகைய அதிசயம் நிகழும்போது, இந்த அதிசய ராஜ் டேவிட்சனும், நடராஜனை போல சர்வதேச வெளிச்சம் பெறுவான்.

* ஐதராபாத் அணி வீரர்கள் உங்களுடன் எப்படி பழகுகிறார்கள்?

சர்வதேச வீரர்கள், இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் என எல்லோரும் சகஜமாகவே பழகுகிறார்கள். நட்புறவு பாராட்டுகிறார்கள்.

* டி.என்.பி.எல். போட்டிகளிலும், தமிழக அணிக்காக விளையாடியதிலும் மறக்கமுடியாத அனுபவங்களை கூறுங்கள்?

டி.என்.பி.எல். போட்டியின் தகுதிச்சுற்று போட்டியில் 4 விக் கெட்டுகளை வீழ்த்தி வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினேன். அதேபோல கர்நாடக அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணியில் விளையாடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். இது இரண்டையும், அவ்வளவு சுலபமாக மறந்துவிடமுடியாது.

* ஐ.பி.எல்.போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என நினைத்துக்கொள்ளுங்கள், யாருடைய விக்கெட்டை காலி செய்ய நினைப்பீர்கள்?

மகேந்திர சிங் டோனி.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி