ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் தொற்றுபுதிய உச்சம் தொடுகிறது என்று சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையிலேயே இந்தியாவில் தமிழகம் உள்பட எந்தெந்த மாநிலங்களில் எப்போது கொரோனா உச்சம் தொடும் என்ற கேள்வி எழுகிறது.
இது குறித்து பிரபல பொது மருத்துவ நிபுணரும், இந்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குனருமான பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி கணித்து இருக்கிறார்.
இந்தியாவில் ஒரே மாதிரியாக கொரோனா தொற்று உச்சம் தொடாது என்பதுதான் அவரது முக்கிய கணிப்பாக இருக்கிறது.
ஏன் அப்படி என்றால் அதற்கு அவரிடம் தெளிவான பதில் இருக்கிறது, ஒவ்வொரு மாநிலத்திலும், மக்கள் கொரோனா தொற்று நோய்க்கு ஆளானதின் அடிப்படையில் அவற்றுக்கென சொந்தப்பாதை உள்ளது. எனவே நாட்டில் கொரோனா தொற்று உச்சம், ஒரே சீராக இருக்கப்போவதில்லை என்கிறார் அவர். இதற்கு அவர் உதாரணமாக பீகார் மாநிலத்தை காட்டுகிறார்.
பீகார் மாநிலத்தை எடுத்துக்கொண்டால், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் இருந்து இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலமான பீகாருக்கு சென்றபிறகுதான் அங்கு தொற்று பரவல் அதிரடியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஒரு நபர் தனது குடும்பத்தில் உளள மற்றவர்களுக்கு தொற்று பரவலை ஏற்படுத்த சுமார் 10 முதல் 14 நாட்கள் வரை ஆகிறது. எனவே அதன்பின்னர்தான் புதிதாக பாதிப்பு அலை அலையாக ஏற்படுகிறது என்பது பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தியின் கருத்து.
இதே போன்றுதான் ஜார்கண்டிலும். அங்கும் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பி வந்த பின்னரே பரவல் தொடங்கி இருக்கிறது, எனவே அங்கும் கொரோனா உச்சம் தொட நீண்ட காலம் ஆகும் என்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்றை கையாள்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், கை கழுவுதல், தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்று உரத்த குரலில் சொல்கிறார். மக்கள் அடர்த்தி நிறைந்த மாநிலங்களில் தீவிர நடவடிக்கைகள் வேண்டும் என்பது இவரது வலியுறுத்தலாக அமைந்திருக்கிறது.
ஜார்கண்ட், சத்தீஷ்கார், உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதி ஆகியவற்றில் கொரோனா தொற்று குறைவாகத்தான் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியபிறகு பரவல் வேகம் எடுத்து இருக்கிறது என சுட்டிக்காட்டும் பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தி, இங்கெல்லாம் தொற்று உச்சம் தொட நீண்ட நாட்கள் ஆகும், அனேகமாக செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதம் தான் உச்சம் தொடும் என்று கணிக்கிறார்.
பிற மாநிலங்களில் தொற்று உச்சம் தொடுவது எப்போது? பேராசிரியர் ஜி.வி.எஸ். மூர்த்தியின் கணிப்பு வருமாறு:-
* தமிழகம், அரியானா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று செப்டம்பர் மாதம் மத்தியில் உச்சம் தொடும். இந்த மாநிலங்களில் தற்போது தொற்று பரவல் அதிகமாக இருந்து வருகிறது. ஆனாலும், செப்டம்பர் மத்தியில் இந்த அளவுக்கு இருக்காது. குறிப்பாக தமிழகத்தை பொறுத்தமட்டில் ஆகஸ்டு மாதம் மத்தியில் அல்லது 3-வது வாரத்தில் கொரோனா தொற்று உச்சத்தை அடைய முடியும்.
* சில மாநிலங்களில் ஆகஸ்டு மத்தியில் தொற்று உச்சம் தொடும். உதாரணத்துக்கு டெல்லி அதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அங்கு இந்த மாத இறுதியில் அல்லது ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொற்று உச்சம் தொடும்.
* ராஜஸ்தான், பஞ்சாப், மராட்டியம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கொரோனா செப்டம்பர் மாதம் உச்சத்தை எட்டும்.
* தொற்று பரவல் திடீரென அதிகரித்தால், மாநிலங்கள் தயாராக இல்லை என்றால் அரசாங்கங்கள் அதை கையாள்வதற்கு தயாராக வேண்டும். மும்பை உள்ளிட்ட நகரங்களில் இது நேரிட்டது. அண்டை மாநிலமான கேரளாவில், கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துவிட்டதாக மாநிலம் கருதிய நிலையில் கடந்த 10 நாட்களாக திடீரென தொற்று பரவல் பெரிய அளவில் ஏற்பட்டு வருவதை பார்க்க முடியும்.
* மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள நகரங்களில், தீவிரமான கண்காணிப்பு அவசியம். தீவிர நடவடிக்கையும் தேவை. 3 டிக்கள் முக்கியம். அவை, டெஸ்ட் (பரிசோதனை), டிராக் (தடம் அறிதல்), டிரீட்மெண்ட் (சிகிச்சை) ஆகும். இதனால்தான் தொற்று பரவலை குறைக்க முடியும். தீவிரமான சிக்கலில் நழுவாமல் தடுக்க முடியும்.
* சமூகத்தில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று பற்றிய சந்தேகம் எழுந்தாலே அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். பொது இடங்களில் கூடக்கூடாது. சமூகமாக நாம் அரசாங்கத்தின் மீது பொறுப்பை வைக்க முடியாது. சமூகமாக தொற்றை தடுக்கிற பொறுப்பு நமக்கு இருக்கிறது.
ஆக கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் உச்சம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்கிறபோதுதான் தொற்றின் பாதிப்பில், சிக்கலில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.