சிறப்புக் கட்டுரைகள்

சட்டப்படி சரி, தர்மப்படி தவறு...!

ஐ.பி.எல். தன்னுடைய 12-வது ஆண்டில் கோலாகலமாக அடியெடுத்து வைத்திருக்கிறது. இரண்டு சீரான வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது கணக்கை அடக்கமாக, அதே சமயம் அமர்க்களமாகத் தொடங்கி இருக்கிறது.

தினத்தந்தி

இது சென்னை ரசிகர்களின் உற்சாகத் தீயில் நெய் வார்த்திருக்கிறது. தொடக்கம் இப்படி, தொடர்ச்சியும் இது போல் பளிச்சிடும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நிலையில் திருஷ்டி பரிகாரம் போல் ஒரு சம்பவம். அதில் முக்கிய பங்கு வகித்திருப்பவர். நட்பு வட்டத்தில் ஜென்டில்மேன் என அறியப்படும் ரவிச்சந்திரன் அஸ்வின் என்று வரும் போதுதான் கொஞ்சம் நெருடுகிறது. வீரர்களுக்கு சொந்த நிலை நிற்பு என்கிற சவால் எப்போதும் கூடவே இருக்கிறது. அதை வென்றாக வேண்டும். உலகக்கோப்பை வருகிறது அதில் இடம் பெறுவதை தவறவிட்டுவிடக்கூடாது. ஆகவே ஒவ்வொரு வீரரும் தொட்டால் ஷாக் அடிக்கும் உணர்ச்சிப் பிழம்புகளாகவே இருக்கிறார்கள் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியதே.இந்த நிலையில் யாருக்கும் எதற்கும் ஓர் அங்குலம் விட்டுக்கொடுக்கவும் மாட்டார்கள். கேட்டுப்பெறவும் மாட்டார்கள்..நீயா, நானா பார்த்து விடுவோம் என்கிற மனநிலையில் தான் இருப்பார்கள். போட்டிகளின் இறுக்கம், அழுத்தம் மிகுந்த சூழல் எல்லாமே நாடி நரம்புகளில் சூடேற்றியே வைத்திருக்கும்.

இப்படிப்பட்ட ஒரு கட்டத்தில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளின் போட்டி ஆட்டம் ஆரம்பம் ஆகிறது. ராஜஸ்தான் ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் விளாசித் தள்ளுகிறார். பந்து வீசப்படும் முனையில் நின்ற அவர் ரன் எடுப்பதை எளிதாக்கும் விதத்தில் பந்து வீசப்படும் முன்பே எல்லைக்கோட்டை விட்டு வெளியில் வருகிறார். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அஸ்வின் கிரிக்கெட் ஆட்டத்துக்குரிய கண்ணியத்துடன் அவரை எச்சரித்திருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. பந்து வீச வந்தவர் அதே போக்கில் விக்கெட்டை தட்டி விழச்செய்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) 41 16 விதிப்பிரகாரம் இது தவறல்ல. நாற்பதுகளின் பிற்பகுதியில் இந்திய அணி ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்டிருந்த போது இவ்வாறான ஒரு செயலை இந்திய ஆட்டக்காரர் வினூ மங்கட் செய்து அதனால் இத்தகைய செயலுக்கு மங்கடியன் என்கிற ஒரு பெயரே ஏற்பட்டுப் போய்விட்டது.

இத்தகைய சூழ்நிலைகள் தோன்றக்கூடும் என்பதால் தான் இப்படிப்பட்ட ஒரு விதியையே உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது அதற்கான தேவை வரும்போது அதை பயன்படுத்துவதில் என்ன தவறு என்று சிலர் கேள்வி எழுப்ப, வேறு சிலர் இங்கே நாம் யுத்தம் நடத்த வரவில்லை. இது ஒரு விளையாட்டு. அதில் போட்டி இருக்கவே செய்யும். ஆனால் அது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. கண்ணிய எல்லைகளை கடந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பந்து வீச வந்தவர் பந்தை வீசாமல் இப்படிப்பட்ட ஒரு செயலில் ஈடுபட்டாலும் அல்லது அதை செய்ய முடியாமல் போய்விட்டாலும் அந்தப் பந்து வீசப்படும் ஓவரில் ஒரு பந்தாகக்கணக்கிடப்பட மாட்டாது. அது ஒரு டெட்பால் என்றே கருதப்படும். நடுநாயகமாக நடுவர்கள் நிற்பது எல்லாமே சட்டப்படியும், நியாயப்படியும் நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்கத்தான். அப்படிப்பட்ட நடுவர்களுக்கு இப்படிப்பட்ட செயலில் ஆட்சேபம் இல்லை என்றால் அவர்களும் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. பந்து வீசப்படும் முன்பு எல்லைக்கோட்டை விட்டு பட்லர் வெளியில் வந்தது தவறு. பட்லரை வெளியேற்றக் கிடைத்த ஓர் அருமையான சந்தர்ப்பத்தை அஸ்வின் பயன்படுத்தியது தவறு இல்லை. பந்து வீச்சாளர் என்பவர் சட்டத்துக்கு உட்பட்டு மட்டையாளரை வெளியேற்ற வேண்டும் என்பது தான் அவர் வேலை. அதைச்செய்ததற்காக அஸ்வினை குற்றம் சொல்வது நியாயமல்ல. பட்லர் கட்டுக்குள் நிற்கவில்லை அஸ்வின் அவர் வேலையை அவர் செய்தார். அது சரி ஆனால் பட்லருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கலாமே குடியா முழுகிப்போய் விடும் என்பதுதான் விளையாட்டுத்திறனைபற்றிச் சிந்திக்கும் சராசரி ரசிகனின் ஆதங்கம்.!!!

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், கிரிக்கெட் வர்ணனையாளர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு