பல்லடம்,
மத்திய அரசின் பவர் கிரீட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக்கழகம் ஆகியவை இணைந்து கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 12 உயர் மின்கோபுரங்கள் விளைநிலங்களின் வழியாக மின்கோபுரங்களை நிறுவும் பணியை சுமார் ரூ.22 ஆயிரம்கோடி மதிப்பில் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளது.
இதன் ஒருபகுதியாக பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையம், சுக்கம்பாளையம், இலவந்தி, சித்தம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் உயர் மின் கோபுர பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயர் மின் கோபுர பாதை அமைக்கும் திட்டத்தில் கோவை மாவட்டத்தை போல் இழப்பீட்டு தொகை முன்கூட்டியே வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். மேலும் வெளிமார்க்கெட் அடிப்படையில் அதிகமாக இழப்பீட்டுத்தொகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
முற்றுகை
இதுகுறித்து அடிக்கடி பவர் கிரீட் நிறுவனம் விவசாயிகள் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடம் தாலுகா அலுவலகம் வந்த செம்மிபாளையம், சுக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், உயர் மின் கோபுர எதிர்ப்பு விவசாயிகள், 3 பெண் விவசாயிகள், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி உள்ளிட்டவர்கள் தாசில்தார் சிவசுப்பிரமணியத்திடம் இழப்பீட்டு தொகை குறித்து அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு தாசில்தார் கலெக்டரிடம் பேசி சொல்கிறோம் என்று கூறினார். எப்போதுதான் சொல்வீர்கள் அதற்குள் இந்த திட்டமே முடிந்து விடும் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் உயர் மின் கோபுர பாதையால் பாதிக்கப்படும் விளைநிலங்களுக்கு இழப்பீட்டு தொகை அதிகப்படுத்தலாம் என அறிவிப்பு தாலுகா அலுவலகத்திற்கு வந்துள்ளது. அதன் நகல் வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி தாலுகா அலுவலகத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தாசில்தார் சிவசுப்பிரமணியம் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே தகவலறிந்து அங்கு வந்த பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் தலைமையிலான போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இழப்பீட்டு தொகை குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் பேசி பின்னர் விவசாயிகளுக்கு தகவல் அளிக்கப்படும் என்றும், இது குறித்து வருகின்ற திங்கட்கிழமை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த முற்றுகை போராட்டத்தால் பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.