செய்திகள்

வாகன ஓட்டுனர்களிடம் தவறாக பேசும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை

வாகன ஓட்டுனர்களிடம் தவறாக பேசும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட அனைத்திந்திய வாகன ஓட்டுனர்கள் பேரவை சார்பில் ஓட்டுனர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் சென்னையில் கார் டிரைவர் ராஜேஷ் என்பவர், போலீசார் தகாத வார்த்தையில் பேசியதால் தற்கொலை செய்து கொண்டார். அதனை கொலை வழக்காக பதிவு செய்து, அதற்கு காரணமாக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்ட வாகன ஓட்டுனர்களிடம் போலீசார் தகாத வார்த்தையால் பேசி வருகிறார்கள். அது வேதனையாக உள்ளது. அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அ.ம.மு.க.வை சேர்ந்த காசிலிங்கம் என்பவர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி 41-வது வார்டு டூவிபுரம் 2-வது தெருவில் தற்போது புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடம் அருகே பல மாதங்களாக கழிவுநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அந்த கழிவு நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.

தூத்துக்குடி அண்ணா பழைய பஸ்நிலைய ஆட்டோ தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் சங்கத்தில் 83 பேர் உள்ளனர். நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு தொழில் செய்து வருகிறோம். தற்போது பழைய பஸ் நிலையத்தை இடம் மாற்றம் செய்யும் வகையில் புதிய பஸ் நிலையத்தோடு சேர்த்து ஒருங்கிணைந்த பஸ் நிலையமாக மாற்ற போவதாக தெரிகிறது. அவ்வாறு இடம் மாற்றம் செய்யும் பட்சத்தில் திருச்செந்தூர், நெல்லை, ஸ்ரீவைகுண்டம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடம் அருகே எங்கள் சங்கத்தை சேர்ந்த 83 ஆட்டோ ஓட்டுனர்கள் தொழில் செய்யும் வகையில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் சிலர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி-நெல்லை சாலையில் வாகைகுளம் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியே செல்லும் போது சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் அந்த சுங்கச்சாவடியில் பணிபுரிபவர்கள் யார் என்று அறிந்து கொள்ள எந்தவித அடையாளமும் இல்லை. ஆகையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சுங்கச்சாவடியை கடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.

தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் கருப்பணன் மற்றும் பலர் கொடுத்த மனுவில், நாங்கள் தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் நகரில் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு போதிய அடிப்படை வசதிகள் இன்று வரை செய்து தரப்படவில்லை. நாங்கள் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கு முன்பு குடிநீர் இணைப்புக்காக ரூ.16 ஆயிரம் கட்டியுள்ளோம். ஆனால் எங்கள் பகுதிக்கு இதுவரை எந்த ஒரு குடிநீர் இணைப்பும் வழங்கப்படவில்லை. கடல்நீர் ஊருக்குள் வராமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்பு பாலம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

அத்திமரப்பட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் தினமும் மாலை ஒருவித மஞ்சள் நிற சாரல் துளிகள் வானில் இருந்து விழுகின்றன. அது துர்நாற்றத்துடன் இருக்கிறது. இது பல மாதங்களாக நடந்து வருகிறது. மாலை நேரங்களில் வெளியே சென்றால் அந்த மஞ்சள் நிற சாரல் துளிகள் ஆட்களின் மீது விழுகிறது. தற்போது தோல் சம்பந்தமான நோய்கள் அதிக அளவில் காணப்படுவதால் அதற்கு, இந்த துளிகள் ஒரு காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்த வேண்டும் என்று கூறி இருந்தனர்.

தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனுடையோர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் மற்றும் தட்டார்மடத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலியான மாற்றுத்திறனாளி அரிராமனின் மனைவி மற்றும் பிள்ளைகள் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், மாற்றுத்திறனாளியான அரிராமன் கடந்த மாதம் வீட்டில் ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தார். தற்போது அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து அரசு மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. வறுமையில் இருக்கும் அவருக்கு வீடு கட்டிக்கொடுத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து