செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது - மத்திய மந்திரி வழங்கினார்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்கான சிறப்பு விருதை மத்திய மந்திரி வழங்கினார்.

தினத்தந்தி

பனாஜி,

இந்திய சர்வதேச திரைப்பட விழா, இந்திய அரசின் திரைப்படத்துறையால் 1952-ம் ஆண்டு முதன் முறையாக மும்பையில் நடைபெற்றது. அதன் பின்னர் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் நடந்தது. 2013-ம் ஆண்டு 44-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்றது.

இந்நிலையில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கோவா மாநில தலைநகர் பனாஜியில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விழாவுக்கு தலைமை தாங்கினார். விழாவை நடிகர்கள் அமிதாப்பச்சன், ரஜினிகாந்த், கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோஹர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி சிறப்பு விருதை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து வழங்கினர். ரஜினிகாந்துக்கு விருதுடன் ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படுவதற்கு முன்னர் அவர் நடித்த சிறந்த படங்களின் காட்சிகள் குறும்படமாக திரையில் காண்பிக்கப்பட்டது. அப்போது பலத்த கர ஒலி எழுப்பப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரான்ஸ் நாட்டு நடிகை இசபெல்லா ஹப்பர்ட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. முன்னதாக மறைந்த திரை பிரபலங்களான கிரேசி மோகன், கன்னட நடிகர் கிரீஷ் கர்னாட் உள்ளிட்டோருக்கு விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வருகிற 28-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறும் இந்த சர்வதேச திரைப்பட விழாவில் அமிதாப்பச்சனை கவுரவிக்கும் வகையில் அவர் நடித்த 6 படங்கள் திரையிடப்பட உள்ளன. இதேபோல் பொன்விழா ஆண்டையொட்டி சிறந்த 12 திரைப்படங்களின் வரிசையில் கே.பாலசந்தர் இயக்கிய இரு கோடுகள் திரையிடப்படும்.

மேலும் சர்வதேசம், இந்தியன் பனோரமா உள்பட பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் கோவாவில் உள்ள 3 இடங்களில் திரையிடப்பட இருக்கின்றன. ஈரான், கொரியா, பிரான்ஸ் உள்பட 76 நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்வேறு மொழி திரைப்படங்களும், இந்தி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சேர்ந்த 41 திரைப்படங்களும் திரையிடப்படும்.

இப்பிரிவில் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஹவுஸ் ஓனர் ஆகிய 2 தமிழ் திரைப்படங்களும் தேர்வாகியுள்ளன.

விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், ராம், விக்னேஷ் சிவன், நடிகைகள் நித்யா மேனன், தமன்னா, டாப்சி உள்ளிட்டோர் திரை தொழில்நுட்பம் சார்ந்து பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியும், இசையமைப்பாளர் சங்கர் மகாதேவனின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.


சிறப்பு விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் - ரஜினிகாந்த் பேச்சு

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட சிறப்பு விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ரஜினிகாந்த் கூறினார்.

கோவாவில் நேற்று 50-வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துக்கு திரைப்படத்துறைக்கு ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் அங்கு சென்றார். விழா நடந்த இடத்திற்குள் ரஜினிகாந்த் நுழைந்தவுடன் பார்வையாளர்கள் கைகளைதட்டி ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர்.

இதையடுத்து மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இணைந்து ரஜினிகாந்துக்கு சிறப்பு விருதை வழங்கினர்.

விருது பெற்ற ரஜினிகாந்த், இந்த மதிப்புமிக்க சிறப்பு விருதைப் பெற்றதால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருதை எனக்கு வழங்கியதற்காக இந்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த விருதை என்னுடன் பணிபுரிந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, என் ரசிகர்கள் மற்றும் என்னை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கூறினார்.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் விழா மேடைக்கு பேச வந்தபோது, அங்கிருந்த பார்வையாளர்களில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோவா மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே உள்ள நதிநீர் பிரச்சினையில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் துறை செயல்படுவதாக கூறி சிலர் எதிர்ப்பு கோஷம் எழுப்பினர். அவர்கள் விழா அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற அமிதாப்பச்சன் பேசுகையில், எனது ஏற்றத் தாழ்வுகள் அனைத்திலும் எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்று பேசினார்.

ரஜினிகாந்த் பற்றி அவர் பேசும்போது, எனது நண்பர் ரஜினிகாந்த் ஹம், அந்தா கனூன் மற்றும் கிரப்தார் போன்ற படங்களில் என்னுடன் சேர்ந்து நடித்தார். எங்களுக்கிடையே எப்போதுமே சில சச்சரவு இருக்கிறது. நான் அவருக்கு சில அறிவுரைகளை வழங்குவதும், பின்னர் அவர் எனக்கு ஏதாவது பரிந்துரைப்பதும் தொடர்ந்து நடக்கிறது. இருப்பினும், நாங்கள் ஒருவருக்கொருவர் ஆலோசனையைப் பின்பற்றுவதில்லை என்று கூறினார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை