புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்து கட்சிக் கூட்டத்தின் போது, லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவம் இடையே நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி பேசியது குறித்து பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன. கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை சீனாவிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டு விட்டார் என்று சிலர் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் எல்லையில் நடந்த மோதல் குறித்து பிரதமர் அலுவகம் இன்று விளக்கமளித்துள்ளது. அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
நமது கட்டமைப்புகளை அகற்ற சீனா வலியுறுத்தியது. அதற்கு இந்தியா மறுப்பு தெரிவித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கட்டமைப்புகளை அகற்ற முயன்ற சீனாவின் முயற்சிக்கு பாதுகாப்பு படையினர் கடுமையான பாடம் கற்றுக்கொடுத்துள்ளனர். சீனாவின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி உட்புக முயன்றால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றே பிரதமர் மோடி குறிப்பிட்டார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதார் தெரிவித்த கருத்து குறித்து சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இந்திய ராணுவத்தின் தியாகம் ஒருநாளும் வீண்போகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.