கூடலூர்,
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாகவே உள்ளனர். முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரே இப்பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
அணையின் மொத்த உயரம் 152 அடி ஆகும். இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து இல்லாததால் தற்போது 112.75 அடி வரையே தண்ணீர் உள்ளது. இதனால் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்படுமோ? என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இருந்த போதிலும் கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு தற்போது பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள முல்லைப்பெரியாறு கூட்டாறு, வண்ணான்துறை, காஞ்சிமரத்துறை, இரவங்கலாறு, ஓடைப்பகுதி, ஒத்தகளம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஓடை பகுதிகளில் இரவில் டிராக்டர்கள் மற்றும் மாட்டுவண்டிகள் மூலம் சிலர் மணல் அள்ளிச்செல்கின்றனர். இதன் காரணமாக கூடலூர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில மாதங்களில் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு விடும்.
அப்போது கிணற்று பாசனத்தை நம்பி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுவார்கள். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், இரவில் ஓடை, ஆற்றுப்பகுதிகளில் மணலை அள்ளிச்செல்பவர்கள் குறிப்பிட்ட இடத்தில் குவித்து வைக்கின்றனர். பின்னர் அவற்றை லாரிகள் மூலம் எடுத்துச்சென்று விற்பனை செய்கின்றனர். அத்துடன் ஓடை, ஆறுகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீரும் திருடப்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.