கே.வி.குப்பம்
கே.வி.குப்பம் தாலுகாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காலில் விழ முயன்ற நரிக்குறவர்களிடம் காலில் விழுவது தவறு என்று சுட்டி காட்டினார்.
கலெக்டர் திடீர் ஆய்வு
கே.வி.குப்பம் தாலுகாவில் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீர் ஆய்வு செய்தார். துத்தித்தாங்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியைப் பார்வையிட்டு அதை பழுதுபார்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வடுகந்தாங்கலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள செவிலியர் தங்கும் விடுதிகளை ஆய்வு செய்தார். அவற்றின் தன்மைகளைக் கேட்டு அறிந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டருக்கு அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து வடுகந்தாங்கல் சந்தைமேடு பகுதியில் அமைந்துள்ள 39 ஊராட்சிகளுக்கான புத்தாக்கத் திட்ட பயிற்சியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் வாழ்ந்து காட்டுவோம் திட்ட வாழ்வாதார சேவை மையத்தை பார்வையிட்டார்.
வடுகந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலகம் சென்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். வடுகந்தாங்கல் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் கலெக்டரைச் சந்தித்தனர்.
காலில் விழுவது தவறு
அப்போது அவர்கள் வீட்டுமனை கேட்டு கலெக்டரின் காலில் விழ வந்தனர். அவர்களை கலெக்டர் தடுத்து நிறுத்தினார். யாரும் காலில் விழக்கூடாது, கும்பிடக் கூடாது நானும் உங்களைப் போன்றவன்தான்" என்று கூறினார்.
பின்னர் நரிக்குறவர்களின் கோரிக்கையான வீட்டு மனைகள் வழங்குவதற்கான இடங்களைப் பார்வையிட்டார். இ.பி.காலனியில் விடுபட்டவர்களுக்கான வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான இடத்தைப் பார்வையிட்டார்.
ஆய்வின்போது தாசில்தார் அ.கீதா, வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி, வட்டார மருத்துவ அலுவலர் திவ்யா, வேளாண்மை உதவி இயக்குனர் வினித் மேக்தலின், கிராம வருவாய் ஆய்வாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் சேகுவேரா,
ஊராட்சி மன்ற தலைவர்கள் வடுகந்தாங்கல் ஜெயந்திஜெயபால், அங்கராங்குப்பம் சோபா, வேப்பங்கநேரி எஸ்.வி.கே. மோகன், பில்லாந்திப்பட்டு பார்வதிவேலு, ஊராட்சி செயலாளர்கள் பழனி, பாலாஜி, சுந்தரமூர்த்தி, மகளிர் வாழ்வாதார சேவை மையம் மாவட்ட செயல் அலுவலர் கங்காதரன், இளம் வல்லுனர் கிருத்திகா, மைய அலுவலர் இம்ரான் பாஷா, உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட பலர் உடன் இருந்தனர்.