மதுரை விமான நிலையத்தில் இருந்து வருகிற 1-ந்தேதி முதல் 24 மணி நேர விமான சேவை தொடங்கப்படுகிறது என்று விமான நிலைய இயக்குனர் தெரிவித்தார்.
விரிவாக்க பணி
மதுரை விமான நிலையத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு கட்ட வளர்ச்சி பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுதாடர்பாக மதுரை விமான நிலைய இயக்குனர் கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணி ரூ.110 கோடி செலவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு (2024) ஏப்ரல் மாதத்திற்குள் இந்த பணி முடிவடையும்.
மேலும் விமான நிலைய ஓடுபாதை விரிவாக்க பணிகளுக்காக 2 சதவீதம் நீர்ப்பிடிப்பு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
24 மணி நேர சேவை
குறிப்பாக, வருகிற 1-ந்தேதியில் இருந்து, மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை தொடங்கப்படுகிறது. ஏற்கனவே மதுரையில் இருந்து, சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும், துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
24 மணி நேர விமான சேவை தொடங்கப்படும்போது, பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வர இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.