தமிழக செய்திகள்

அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

பாலாறு அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பம்ப் ஆபரேட்டர் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.

தினத்தந்தி

சென்னை,

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்த தொடர் கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாபேட்டை பாலாறு அணைக்கட்டில் இருந்து நேற்று காலை 8 மணியளவில் வினாடிக்கு 91 ஆயிரத்து 256 கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டது. நேரம் செல்ல செல்ல நீர் திறப்பு வினாடிக்கு 1 லட்சத்து 4 ஆயிரத்து 54 கன அடியாக உயர்த்தப்பட்டது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

காஞ்சீபுரம் பெருநகராட்சி ஊழியரான பம்ப் ஆபரேட்டர் கருணாகரன் (வயது 56) நேற்று காலை ஓரிக்கையில் உள்ள பாலாற்று நீரேற்றத்திற்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். அவரது கதி என்ன? என்பது இதுவரை தெரியவில்லை.

அடித்து செல்லப்பட்ட ஆடு, மாடுகள்

பாலாற்று வெள்ளப்பெருக்கால் வாலாஜாபாத் பஸ் நிலையத்தில் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது. அவளூர், வில்லிவலம், வெங்குடி உள்ளிட்ட கரையோர கிராமங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் வெள்ளத்தில் சிக்கிய 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், வருவாய்த்துறையினருடன் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

வில்லிவலம் கிராமத்தின் அருகே வயல்வெளியில் பாலாற்று வெள்ளம் புகுந்ததால் மேய்ச்சலில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அங்கு மேய்ச்சலுக்கு சென்ற 10-க்கும் மேற்பட்டோர் ஆற்றின் நடுவே வெள்ளத்தில் சிக்கி கொண்டனர். அவர்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ரப்பர் படகு மூலம் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.பாலாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கடல் போல் காட்சியளிக்கிறது. செவிலிமேடு பாலாறு தரைப்பாலத்தை முழுவதுமாக மூழ்கடித்தபடி வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாலாறு மற்றும் செய்யாற்றில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?