தென்காசி,
தென்காசியில் உள்ள நெல்லை ரோடு சம்பா தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 61). தொழில் அதிபரான இவர் மர வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக தென்காசி வேட்டைக்காரன்குளம், காஞ்சீபுரம் கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மர அறுவை ஆலைகள் உள்ளன. இவருடைய மனைவி விஜயலட்சுமி (58). நேற்று காலை 11.30 மணிக்கு இவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர் தலையில் ஹெல்மெட் அணிந்து இருந்தார். மற்றொருவர் உடல் முழுவதையும் மறைத்தவாறு பர்தா உடை அணிந்து இருந்தார்.
வீட்டுக்குள் சென்ற இருவரும் விஜயலட்சுமியின் வாயை கையால் பொத்தியவாறு, வீட்டுக்குள் தரதரவென இழுத்து சென்றார். சத்தம் போட்டால் ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்து விடுவதாக மிரட்டி அவரது கைகளை செல்லோ டேப் மூலம் இறுக்கமாக கட்டினர். பின்னர் வீட்டில் இருந்த 100 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்த 2 மர்மநபர்களும், விஜயலட்சுமியை அங்குள்ள அறைக்குள் தள்ளி விட்டு விட்டு, வெளியே ஓடி வந்து, மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.