தமிழக செய்திகள்

சி.பி.ஐ. வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கு; எடையை தவறாக பதிவு செய்ததாக தகவல்

சி.பி.ஐ. வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான வழக்கில் எடையை ஆவணங்களில் தவறாக பதிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை பாரிமுனையில் செயல்படும் தனியார் தங்க ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது, குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட அந்த தங்கம், அதே நிறுவனத்தில் உள்ள பாதுகாப்பு லாக்கரில் பத்திரமாக வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அந்த லாக்கரின் சாவிகள் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி மாதம் குறிப்பிட்ட லாக்கரை திறந்து பார்த்தபோது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் மாயமாகிவிட்டது.

இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இதுபற்றி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன், சத்தியசீலன் மற்றும் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை இதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி நாங்கள் செயல்படுகிறோம் என்றும், திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கப்படும் என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ. போலீசாரிடம் கேட்டு பெறுவோம் என்றும் சி.பி.சி.ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் மாயமான 103 கிலோ தங்கம் பற்றி சி.பி.ஐ. போலீசாரும் தனியாக களத்தில் இறங்கி விசாரணை நடத்தி வருகிறார்கள். டெல்லியில் இருந்து சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. ஒருவரிடம் ஏற்கனவே இது பற்றி விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்து முன்னாள் டி.ஜி.பி. ஒருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையில் தங்கத்தை மொத்தமாக எடை போட்டதாகவும், அந்த எடையை ஆவணங்களில் எழுதும்போது மாற்றி எழுதிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் 400.47 கிலோ தங்கத்தில் தற்போது 296 கிலோ மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த எடை மாற்றி எழுதப்பட்டது என்பது குறித்து முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்