தமிழக செய்திகள்

107 டிகிரி வெயில் சென்னையில் அனல் காற்று மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்

சென்னையில் இந்தாண்டு இதுவரையில்லாத அளவாக 107 டிகிரி வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசுவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

சென்னை,

சென்னையில் இன்று காலை முதலே வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் 10 ஆண்டுகளில் இல்லாத வெயிலுக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் கடும் வெப்பம் வாட்டி எடுக்கும் நிலையில் இன்று அனல்காற்று வேகமாக வீசியது.சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் அனல் காற்று வீசும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத் திருந்தது. இதன்படி கடந்த 2 நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது.

இன்று 108 டிகிரி வெயில் அடித்தது. இதனால் சாலைகளில் நெருப்பை அள்ளிப்போட்டது போல வெப்பம் காணப்பட்டது. கடுமையான அனல் காற்று வீசியது.காலை 8.30 மணிக்கே வெப்பநிலை 98 டிகிரியாக இருந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பகலில் வெளியில் நடமாடியவர்கள் வியர்வை மழையில் நனைந்தனர். இதனால் வழக்கத்துக்கு மாறாக தண்ணீர் தாகம் அதிகமாக எடுத்தது.சாலைகளில் பகல் 11 மணிக்கே அனல் காற்று வீசியதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் 106 டிகிரி பதிவாகியிருந்தது. இன்று அதிகபட்ச அளவாக இன்று 107 டிகிரி வெப்பம் பதிவானது. கடந்த 10 ஆண்டுகளில் மே மாதத்தில் சென்னை எட்டாத வெப்பநிலையை எட்டி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அனல்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அனல் காற்று நாளை வரை வீசும். அதிகபட்சமாக 42 செல்சி யஸ் (107.6 டிகிரி) வரை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி-மின்னல், பலத்த சூறை காற்றுடன் கூடிய மழை பெய்யும்.வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை வரை அனல் காற்று வீசும் என்று கூறி உள்ளனர்.