பழனி முருகன் கோவிலின் கீழ் 38 உபகோவில்கள் உள்ளன. இதில் திருஆவினன்குடி கோவில் வரலாற்று சிறப்புமிக்கது. இந்த கோவிலே முருகப்பெருமானின் 3-ம் படைவீடாக திகழ்கிறது. இங்குள்ள மூலவரான குழந்தை வேலாயுதசுவாமி மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னரே மலைக்கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த கோவிலின் கும்பாபிஷேக தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் வருடாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது.
அந்தவகையில் நேற்று திருஆவினன்குடி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோவில் கொடிமண்டபம் முன்பு மரச்சப்பரம் வைக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து 6 கலசங்கள் வைத்து கலச பூஜை, 108 வலம்புரி சங்கு வைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் வேதபாராயணம், பூர்ணாகுதி, சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து கலசங்கள் உட்பிரகாரம் வலம் வந்து உச்சிக்கால பூஜையில் மூலவர் குழந்தை வேலாயுதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், கலசாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பால், பழம், பன்னீர் என 16 வகை பொருட்களால் அபிஷேகம் மற்றும் 16 வகை தீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜை முறைகளை கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் குருக்கள்செய்திருந்தனர்.