தமிழக செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண் இடம்பெற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

11-ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு, நீட்' தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற வரிசையில் தற்போது 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படமாட்டாது என்றும், தேர்ச்சி' என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது, மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா தாக்கம் காரணமாக அ.தி.மு.க. ஆட்சியில் 10-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்க உத்தரவிடப்பட்டு, அதன்படி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

நடப்பாண்டில் தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் சூழ்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது என்றும், தேர்ச்சி' என்று மட்டுமே சான்றிதழில் குறிப்பிடப்படும் என்றும் அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

எந்த மதிப்பெண் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அல்லது எந்த மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறதோ அந்த அடிப்படையிலாவது 10-ம் வகுப்புக்கான மதிப்பெண்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படவேண்டும்.

முக்கியத்துவம் வாய்ந்த 10-ம் வகுப்பு சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுகிறது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய அனைவரையும் கலந்தாலோசித்து ஏதாவது ஒரு வழிமுறையை பின்பற்றி 10-ம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழ்களில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு