திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு கணேஷ் (15 வயது), புவன்ராஜ் (12 வயது) என்ற 2 மகன்கள் இருந்தனர். கணேஷ் திருத்தணியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் பொதுத்தேர்வை எழுதிவிட்டு வந்த கணேஷ், திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவரது தம்பி புவன்ராஜ், அண்ணன் தூக்கில் தொங்கியபடி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
அவரது சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் கணேஷை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கணேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கணேஷ் தமிழ் மொழித்தேர்வை சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த அவர், வேலைக்கு சென்றிருந்த தனது தாய் பாரதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு தேர்வை சரியாக எழுதவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு தாய் பாரதி, "மதிப்பெண் குறைந்தால் பரவாயில்லை, கவலைப்படாமல் வீட்டில் இரு. நான் மாலை வருகிறேன்” என்று ஆறுதல் கூறியுள்ளார்.
இந்த நிலையில் மாணவன் விபரீத முடிவை எடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.