சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கால்நடை பராமரிப்பு துறை மூலமாக 2011-ம் ஆண்டு முதல் கிராமத்தில் உள்ள ஏழை தாய்மார்களுக்கு தலா 4 வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 11 லட்சம் பெண்களும், விலையில்லா கறவைப் பசு வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பேரும் பயன் அடைந்துள்ளனர்.
கிராமப்பகுதி ஏழைகளுக்கு ஒரு குடும்பத்துக்கு 25 நாட்டுக்கோழிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் பேரூராட்சியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்திற்கும் 25 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒரு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டு ஒன்றுக்கு ரூ.2.15 லட்சம், அழைப்பு மையம் நடத்த மாதம் ஒன்றுக்கு ரூ.10.6 லட்சம் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
நகர்ப்புறம், மற்றும் மாநகரங்களில், விபத்தில் பாதிக்கப்படும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய பாலிகிளினிக் மையம் உள்ளது. இதற்காக கூடிய விரைவில் ஆம்புலன்ஸ்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கால்நடை பூங்காவை பொறுத்தவரை அமையவிருக்கும் கட்டிடங்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக இருக்கும் நோக்கில் 2 கட்டிடங்களை முதல்-அமைச்சர் தேர்ந்தெடுத்துள்ளார். கூடிய விரைவில் பணிகள் தொடங்கப்படும்.
ஒரத்தநாடு, நெல்லை, நாமக்கல், சென்னை ஆகிய பகுதிகளில் 4 கால்நடை மருத்துவ கல்லூரிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் 5-வதாக சேலம் தலைவாசல் பகுதியில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இந்தியாவிலேயே 5 கால்நடை மருத்துவ கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழகம் திகழப்போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.