சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
அதிலும் குறிப்பாக தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவில் மதுபாட்டில்கள் தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டு, கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தடுப்பதற்காக தமிழக-ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் மது பாட்டில்களை கடத்தி வந்த 12 பேரை மடக்கிப் பிடித்து போலீசார் கைது செய்தனர்.