தமிழக செய்திகள்

நெல்லையில் 1.25 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

தச்சநல்லூர், சிதம்பரநகர் குளத்தங்கரை அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிதம்பரநகர் குளத்தங்கரை அருகே போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் சந்தனபாண்டி மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த தச்சநல்லூர் நடுத்தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் ராமசுப்பிரமணியன் (வயது 29), மேலப்பாளையம் ஆசுரான் கிழக்குத் தெருவை சேர்ந்த ஷேக்தாவூது மகன் சிந்தாமதார்(22) மற்றும் தச்சநல்லூர் டவுண் சாலையை சேர்ந்த ராஜ் மகன் ராகேஷ்(23) ஆகியோரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தச்சநல்லூர் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.