திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, முதலிபாளையம் ஊராட்சி உயர்நிலைப்பள்ளியில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிட திறப்பு விழாவுக்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. இதில் மணி நேரம் வினாத்தாளை மாணவர்கள் மனதிலே தயார் படுத்திகொண்டு பதில் எழுதுவதற்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
பிளஸ்-1 தேர்வு வருகிற 4-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வு முடிவுகள் மே மாதம் 14-ந் வெளியிடப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் மாதம் 13-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இந்த தேர்வின் முடிவுகள் மே மாதம் 4-ந் தேதி வெளியிடப்படுகிறது.
மாணவர்களின் வசதிக்காக இந்த ஆண்டு தேர்வு மையங்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் கல்வியாண்டில் 2,798 தேர்வு மையங்கள் இருந்த நிலையில், 2020-ம் கல்வியாண்டில் 3,012 மையங்கள் என 214 மையங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.