சென்னை,
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், நிதிநிலை, பொருளாதாரம் உள்ளிட்டவற்றிற்கான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் தணிக்கை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டிலும் சட்டசபையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளில் அரசு சமர்ப்பிக்கும். ஆனால் கடந்த 2 முறை இந்த அறிக்கையை சட்டசபையில் கடந்த அரசு சமர்பிக்கவில்லை.
ஆனால் கவர்னர் உரை நிகழ்த்தப்பட்ட முதல் கூட்டத்தொடரிலேயே புதிய அரசு, 2018 மற்றும் 2019-ம் நிதியாண்டுகளுக்கான தணிக்கை அறிக்கைகளை நேற்று சமர்ப்பித்தது. பொதுத்துறை நிறுவனங்கள் பிரிவில் 2019-ம் ஆண்டு மார்ச் வரையிலான தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.13 ஆயிரத்து 259 கோடி இழப்பு
தமிழகத்தில் மொத்தம் 75 பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 5 செயல்படவில்லை. இந்த நிறுவனங்களில் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 153 கோடி ரூபாயை தமிழக அரசு முதலீடு செய்துள்ளது. அவற்றில் மின்துறையில் அரசு செய்துள்ள முதலீடு மட்டும் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 436 கோடி ரூபாயாகும் (88.98 சதவீதம்).
தமிழகத்தில் 5 மின்துறை நிறுவனங்கள் உள்ளன. 2014-15-ம் ஆண்டுகளில் இந்த நிறுவனங்களின் மூலம் ரூ.12 ஆயிரத்து 763.92 கோடி ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டது. 2018-19-ம் ஆண்டில் இழப்பு ரூ.13 ஆயிரத்து 176 கோடியாகும். இவற்றில் டி.என். பவர்பின் என்ற நிறுவனம் மட்டுமே ரூ.83.20 கோடி லாபத்தை ஈட்டியது.
தமிழ்நாடு மின்சார வாரியம் (டி.என்.இ.பி.), தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) மற்றும் டான்டிரான்ஸ்கோ ஆகிய மின்துறை நிறுவனங்கள் ரூ.13 ஆயிரத்து 259.40 கோடி இழப்பை அடைந்தன. டான்ஜெட்கோவில் இழப்பு அதிகரித்ததற்கு மின் கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவோடு பணியாளர் மற்றும் நிதிச்செலவினங்கள் அதிகரிப்பே முக்கிய காரணங்களாக உள்ளன. 2018-19-ம் ஆண்டில் வருவாய் ரூ.2,533.90 கோடியாக அதிகரித்தாலும், கூடுதல் செலவு ரூ.7,396.54 கோடி அதிகரித்துள்ளது.
உதய் திட்டத்தில் கையெழுத்திட்டபிறகு, 2018-19-ம் ஆண்டில் தமிழக அரசு ரூ.9,126 கோடி உதவித்தொகையை பெற்றது. ஆனாலும், செயல்பாட்டு அளவுகளை எட்டாததாலும், மின் கட்டணத்தை உயர்த்தாததாலும் எதிர்பார்க்கப்பட்ட நிதி மாற்றங்களை அடைய முடியவில்லை. பொதுத்துறை நிறுவனமான உடன்குடி மின்சக்தி நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையையும் தொடங்கவில்லை.
நிலக்கரி கொள்முதல்
கோல் இந்தியா என்ற நிலக்கரி நிறுவனம் மூலம் நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. 2014-19-ம் ஆண்டுகளில் 106.97 மில்லியன் டன் நிலக்கரியை டான்ஜெட்கோ பெற்றிருக்க வேண்டும். ஆனால் 71.82 மில்லியன் டன் நிலக்கரியை மட்டுமே கொள்முதல் செய்ய முடிந்தது. இதற்காக கோல் இந்தியா நிறுவனத்திற்கு டான்ஜெட்கோ அபராதம் விதிக்கவில்லை.
ஆனால் நிலக்கரியை இறக்கி வைக்க தனியார் நிலக்கரி முனையத்தை பயன்படுத்திய வகையில் ரூ.41.68 கோடி தவிர்க்கக்கூடிய செலவு ஏற்பட்டது. வடசென்னையில் இருந்து மேட்டூருக்கு நிலக்கரியை ரெயில் மூலம் அனுப்பும்போது 47 மாதங்களில் நிர்ணயிக்கப்பட்ட இழப்புக்கு அதிகமாக நிலக்கரி இழப்பு ஏற்பட்டதால் டான்ஜெட்கோ நிறுவனத்திற்கு ரூ.58.37 கோடி இழப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த நஷ்டத்திற்காக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை டான்ஜெட்கோ பொறுப்பாளராக்கவில்லை.
சோதனை செய்யாததால் இழப்பு
அதுமட்டுமல்லாமல், ரெயில் சரக்குப்பெட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு நிலக்கரியை ஏற்றாமல் விட்டதால், பயனற்ற வகையில் ரூ.101.35 கோடி சரக்கு கட்டணம் செலுத்த வேண்டியதிருந்தது. டான்ஜெட்கோ நிறுவனத்தின் நிலக்கரி தரத்தை மதிப்பீடு செய்யும் பிரிவில் குறைபாடுகள் உள்ளன. சோதனை செய்யாமலேயே ரூ.411.63 கோடி மதிப்பிலான 13.79 லட்சம் டன் நிலக்கரி வாங்கப்பட்டது. அதற்கான காரணம் பதிவு செய்யப்படவில்லை. அந்த நிறுவனத்தில் நிலக்கரி தர கண்காணிப்பு பிரிவு இல்லை.
2014-19-ம் ஆண்டு காலகட்டத்தில் ரூ.2,317.46 கோடி மதிப்புள்ள ரூ.56.85 லட்சம் டன் நிலக்கரி கூடுதலாக பயன்படுத்தப்பட்டது. தரம் குறைந்த நிலக்கரியினால் அந்த காலகட்டத்தில் ரூ.171.57 கோடி மதிப்புள்ள 844 எம்.யு. மின் உற்பத்தி இழப்பை டான்ஜெட்கோ சந்தித்தது.
டான்ஜெட்கோ நிலத்தில் குவிந்துள்ள சாம்பலை மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி வெளியேற்றவில்லை. 2019-ம் ஆண்டில் 3 அனல் மின்நிலையங்களில் உள்ள சாம்பல் அகழியில் 62.15 மில்லியன் டன் சாம்பல் குவிந்திருந்தது. அகழியில் தொடர்ந்து சாம்பல் சேகரிக்கப்படுவதால் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாறு ஆகியவற்றின் நீர் அசுத்தமாகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.