சென்னை,
விமான நிலையங்களில் பயணிகளிடம் நடத்தப்படும் வழக்கமான சோதனைகளின் போது, சில சமயங்களில் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். இதில் தங்கத்தை பல்வேறு வடிவங்களில் பயணிகள் சிலர் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில் சென்னை விமான நிலையத்தில் இன்று பயணி ஒருவரிடம் இருந்து பேஸ்ட் வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது துபாயில் இருந்து வந்த 49 வயது பயணி ஒருவரின் பையில் தங்கம் இருப்பதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த நபரிடம் இருந்து 62.35 லட்சம் மதிப்புள்ள 1.36 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தங்கத்தை அந்த நபர் 6 பாக்கெட்டுகளில் பேஸ்ட் வடிவில் கடத்தி வந்துள்ளார். அந்த நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது குறித்த விரிவான தகவல்கள் விசாரணைக்கு பிறகு தெரிய வரும் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.