தமிழக செய்திகள்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.15½ கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்

தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகத்தில் ரூ.15½ கோடியில் ஏற்படுத்தப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை,

விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூரில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் 7 கோடி ரூபாய் செலவில் 400 மீட்டர் செயற்கையிழை ஓடுதளம், 5 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு ஜிம்னாஷியம் மற்றும் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் ஆசிரியர்களுக்கான குடியிருப்புகள் என மொத்தம் 15 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.