விபத்தில் பலி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சேகர் வருமா நகரை சேர்ந்தவர் நாகபூஷணம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது, சாலை விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்று விட்டார். அதைத்தொடர்ந்து கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் கோமா நிலையில் இருந்த அவர் 8 மாதங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் தன் மீதும் தனிநபர் விபத்து காப்பீடு திருவள்ளூரில் உள்ள தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் பதிவு செய்து இருந்துள்ளார்.
கோர்ட்டில் வழக்கு
ஆனால் அவர் இறந்ததற்கான விபத்து காப்பீடு தொகையை இன்சூரன்சு நிறுவனம் 6 மாதங்களுக்குள் உயிரிழந்தால் மட்டுமே தர முடியும். ஆனால் இவர் கோமா நிலைக்குச் சென்று 8 மாதம் கழித்து பிறகு உயிரிழந்ததால் அவருக்கு விபத்து காப்பீடு தொகை ரூ.15 லட்சம் தர முடியாது என்று உறவினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்சூரன்சு நிறுவனத்தின் மீது நாகபூஷணம் மனைவி ராணி திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
விபத்து காப்பீடு
இந்த வழக்கின் இறுதி விசாரணையில் விபத்து நடந்து கோமா நிலையில் சென்று உயிரிழந்த நாகபூஷணம் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் விபத்து காப்பீட்டு நிதி உதவியும் குடும்பத்திற்கு மன உளைச்சலுக்குள்ளாகியது தொடர்பாக ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் உட்பட ரூ.15 லட்சத்து 55 ஆயிரம் 6 வாரத்திற்குள் அவர்களுக்கு அளித்திட வேண்டும் என திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் லதா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.