தமிழக செய்திகள்

சென்னையில் சினிமாவில் பயன்படுத்தும் 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல்

உரிய அனுமதி பெறாததால், சென்னையில் சினிமாவில் பயன்படுத்தும் 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் சூர்யா நடித்து வரும் எதற்கும் துணிந்தவன் சினிமா படப்பிடிப்பு சென்னை கோயம்பேடு பகுதியில் நடந்தது. அந்த படப்பிடிப்பில் ஏ.கே.47 டம்மி துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டது. அந்த துப்பாக்கிகளை பயன்படுத்த முறையான அனுமதி பெறவில்லை என்று புகார் கூறப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்தவுடன் கோயம்பேடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

நடிகர் சூர்யாவின் சினிமா படப்பிடிப்பில் பயன்படுத்திய ஏ.கே.47 டம்மி துப்பாக்கிகள் இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அதுபற்றி விசாரணை நடத்தியபோது, அந்த துப்பாக்கிகளை தியாகராயநகரில் வாடகைக்கு எடுத்து வந்தது தெரியவந்தது.

150 துப்பாக்கிகள் பறிமுதல்

தியாகராயநகர் வைத்தியநாதன் தெருவில் இதுபோல சினிமாவுக்கு பயன்படுத்தும் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அந்த நிறுவனத்தின் பெயர் கே.எஸ்.ஆர்.சினி ஆக் ஷன்- ஸ்பெஷல் எப்பெக்ட்ஸ் என்பதாகும். அந்த நிறுவனத்தை செல்வராஜ் என்பவர் நடத்தி வந்தார்.

நேற்று அந்த நிறுவனத்தில் மாம்பலம் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு வைத்திருந்த பல்வேறு வகையான 150 டம்மி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி முறையான விசாரணை நடத்த தென்சென்னை கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாம்பலம் போலீசார் உரிமையாளர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர் வெளியூரில் இருப்பதால், அவரை விசாரணைக்கு ஆஜராக போலீசார் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

கைது செய்ய வாய்ப்பு

டம்மி துப்பாக்கியாக இருந்தாலும் முறையாக போலீஸ் அனுமதி பெற வேண்டும். செல்வராஜ் போலீஸ் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். அதோடு சரி, அதன்பிறகு முறையாக அனுமதி பெறவில்லை. விசாரணை முடிந்த பிறகு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இதுபோல் டம்மி துப்பாக்கி வைத்திருப்பவர்கள் முறையாக அனுமதி பெற வேண்டும் என்று, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு