ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு மூலமாக சுமார் ரூ.1.65 கோடி நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான மாவட்ட அளவிலான ஆய்வு கூட்டம் நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக நீலகிரி மாவட்டத்தில் கூட்டுப்பண்ணையம் மற்றும் மத்திய அரசின் 10 ஆயிரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் மொத்தம் 9 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு அரசு மூலமாக சுமார் ரூ.1.65 கோடி நிதி உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.
ரூ.5 லட்சம்
ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் தொழில் தொடங்குவதற்காக தொடக்க நிதியுதவியாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில்நுட்ப மேலாண்மை பயிற்சிகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகள், வர்த்தக மேம்பாடு தொடர்பான பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான ஆதார நிறுவனங்களான நேஷனல் அக்ரோ பவுண்டேசன், ஸ்நேகாலாய, ஈசா நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வணிக செயல்பாடுகள் மாவட்ட கலெக்டரால் ஆய்வு செய்யப்பட்டது.
இந்த கூட்டத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் செயல் இயக்குனர்கள் மற்றும் இயக்குநர்கள் கலந்து கொண்டு தங்களது வணிக செயல்பாடுகள் பற்றி விளக்கினர்.
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
இதைத்தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்களது விளை பொருட்களிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும் அதனை மின்னனு வர்த்தகத்தின் மூலமாக சந்தைப்படுத்துவது தொடர்பாக குறைந்தப்பட்ச வட்டியில் வழங்கப்படும் நிதியுதவிகளை பெற்று, ஒற்றை சாளர உரிமம் பெற்று eNAM வர்த்தகத்தில் ஈடுபடலாம் என்றார்.
அதனைத்தொடர்ந்து 6 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ஒற்றை சாளர உரிமத்தை விவசாயிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.
கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கருப்பசாமி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ராதகிருஷ்ணன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குனர் ஷிபிலாமேரி, தோட்டகலை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் தாமரைச்செல்வி, தோட்டகலைத்துறை உதவி இயக்குனர்கள் மற்றும் விவசாய சங்கங்களை சேந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.