சென்னை,
ஆழிப்பேரலை அழித்தொழித்து 16 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவர்.
இந்நிலையில் சுனாமி நினைவு தினத்தையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர். மேலும் கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டி சில்வர் பீச்சி, துறைமுகம் சிங்காரதோப்பு கடற்கரையில் பலியானவர்களை நினைத்து உறவினர்கள் கடலில் பால் ஊற்றி வணங்கினர். கன்னியாகுமரியில் உள்ள மணக்குடி மீனவர் கிராமத்தில் சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடைபெற்றது. மரக்காணம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கடலில் பால் ஊற்றி, மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.