உத்திரமேரூர்:
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மலையாங்குளம் கிராமத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியினத்தை சார்ந்த 178 இருளர் குடும்பத்தினருக்கு இலவச வீடுகள் கட்ட பணி ஆணை வழங்கி, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். உத்திரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஹேமலதா ஞானசேகரன், துணைத்தலைவர் வசந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ., காஞ்சீபுரம் எம்.பி. ஜி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு 178 இருளர் குடும்பங்களுக்கு ரூ.8 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கினர்.
மேலும் வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா, வருவாய் ஆர்.டி.ஓ. ராஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.