தமிழக செய்திகள்

இந்து சமய அறநிலையத்துறை மூலம் ரூ.1,789 கோடி கோவில் நிலங்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலையத்துறை மூலம் இதுவரை ரூ.1,789 கோடி கோவில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

தினத்தந்தி

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சென்னை குயப்பேட்டை அருள்மிகு கந்தசாமி ஆதிமொட்டையம்மன் திருக்கோவில் மேம்பாடு குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையர் ஹரிபிரியா, செயல் அலுவலர் எம்.பாஸ்கரன், அறங்காவலர் குழுத்தலைவர் கங்காதரன் பிள்ளை ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வின்போது, அமைச்சர் சேகர்பாபு திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் மடப்பள்ளி சுத்தமாக வைக்கவும், திருக்குளத்தை சீரமைக்கவும், புதிய நந்தவனம் அமைக்கவும் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வேட்டை தொடரும்

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 410 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.1,789 கோடியே 20 லட்சம் மதிப்புள்ள கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. கோவில் நில ஆக்கிரமிப்புகள் மீட்டெடுக்கும் வேட்டை தொடரும். சில அமைப்புகள் தி.மு.க. இந்துகளுக்கு, ஆன்மிகத்திற்கு எதிரான இயக்கம் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். அதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் பதவி ஏற்றபிறகு தகர்த்து எறிந்துள்ளார். சிலர் குறைகளை கண்டு பேசிவருகின்றனர். அது நியாயமான குறைகள் என்றால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவிலில் பாதுக்காக்கப்பட்ட குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்களின் நேர்த்திக்கடனை தீர்ப்பதற்கு திருக்கோவிலுக்கு சொந்தமான 65 தங்கத்தேர்கள், 45 வெள்ளித்தேர்கள் இன்று முதல் கோவில் உள்ளே வீதி உலா வர அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லேண்ட் விவகாரம்

குயின்ஸ்லேண்ட்' விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது பஞ்சாயத்து அரசு இல்லை சட்டத்தின் அரசு. அந்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. சிலை கடத்தலை தடுக்கும் இந்த அரசு, ஏற்கனவே கடத்தப்பட்ட சிலைகள் மீட்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். ஓர் ஆண்டு இறுதியில் ஒட்டுமொத்தமாக எத்தனை சிலைகள் இதுவரை கடத்தப்பட்டுள்ளது, எத்தனை மீட்கப்பட்டது என்பதை தெரிவிப்போம்.

தோல்வி அடைவார்கள்

2011-ம் ஆண்டு பிறகு உள்ள நகைகளை உருக்கி வருவாயை பெருக்குவதை தேவையில்லாமல் பூதாகரம் ஆக்க நினைப்பவர்கள் நிச்சயம் தோல்வி அடைவார்கள். பூத கண்ணாடி வைத்து எந்த தவறும் நடைபெறாத வகையில் நீதிபதிகள் தலைமையில் பணிகள் செய்து வருகின்றோம்.

திருக்கோவில்களில் வருகின்ற வருமானத்தில் ஊதியம் பெறும் அனைத்து பணியாளர்களும் இந்துகளாக இருக்க வேண்டுமென்று இந்து சமய அறநிலையத்துறையின் சட்டப்பிரிவின் கீழ் உள்ளது. அதன்படி அனைத்து பணியாளர்களும் இந்துக்களாக நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு