சென்னை,
அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்றது. பின்னர் ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுத்த 18 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால் 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி மூன்றாவது நீதிபதியான சத்யநாராயணன் வழக்கை விசாரித்து வருகிறார். வழக்கு விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.