தமிழக செய்திகள்

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

தினத்தந்தி

சென்னை,

சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தது செல்லும் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். அதன் விவரம் வருமாறு:-

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செல்கிறார்களா? என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. இந்த 18 சட்டமன்ற தொகுதிகளோடு சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளுக்கு எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்ற நிலை இருக்கிறது. எனவே ஜனநாயக நலனை கருதி உடனடியாக 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். நாடாளுமன்ற தேர்தலோடு இந்த இடைத்தேர்தலையும் நடத்துவது என்பதை ஏற்க முடியாது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்:-

இன்றைய உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்துவதைத் தவிர்க்க முடியாது. 18+2 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடத்துவதை விட, முழு சட்டமன்றத் தேர்தலை நடத்துவதே முறையாகும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர்:-

இந்த தீர்ப்பை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் மேல்முறையீடு செல்வதா? வேண்டாமா? என்பது அவர்களுடைய முடிவு. இந்த 18 தொகுதியோடு திருவாரூர், திருப்பரங்குன்றம் சேர்த்து 20 தொகுதிகளுக்கு தேர்தல் வந்தால் நல்லது என்பது என்னுடைய விருப்பம். மக்கள் தீர்ப்பளிப்பதற்கு வாய்ப்பாக அமையும். மக்களின் மனநிலையை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையும்.

பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

ஏற்கனவே அரசாங்கம் ஸ்திரத்தன்மையோடு நடந்து கொண்டு இருக்கிறது. தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர், மினி கூவத்தூர், குற்றாலம் சென்று மிரட்டும் தொனியில் இருந்து வந்தனர். இன்று அதற்கு ஒரு தெளிவு பிறந்து இருக்கிறது. மேல்முறையீடு செய்யலாம். அங்கு சென்றால் மீண்டும் ஒரு தெளிவற்ற சூழ்நிலை தான் இருக்கும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

ஏற்கனவே 2 சட்டமன்ற உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செய்திருப்பதன் மூலம் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத சிதைந்த சட்டப்பேரவையாக தமிழக சட்டப்பேரவை சுருங்கியுள்ளது. இது நீடிக்கக்கூடாது. தேர்தல் ஆணையம் தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன்:-

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பி பிழைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுதியாக நம்புகிறது. மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி மக்கள் தீர்ப்பை பெறவேண்டும்.

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் பதவிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பால் தமிழக அரசுக்கு ஏற்பட்டு இருந்த ஆபத்து விலகி இருந்தாலும் தமிழக நலனுக்கு ஆபத்து அதிகரித்து இருக்கிறது. இத்தகைய முன்னேற்றங்கள் எதுவும் தமிழகத்துக்கு நல்லதல்ல.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் எடுக்க போகும் முடிவை பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும். அதாவது தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலும் இப்பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு ஆகும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்த தொகுதிகளில் பிரதிநிதிகள் இல்லாமல் உள்ளன. எனவே இனிமேலும் தாமதிக்காமல் அந்த தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே காலியாக உள்ள 2 தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தாமல் இருக்க ஆளுங்கட்சி முயற்சிக்கக்கூடும். அதற்கு தேர்தல் ஆணையம் துணைபோக கூடாது. தற்போது நடைபெற உள்ள 5 மாநில தேர்தல்களோடு இந்த இடைத்தேர்தல்களையும் நடத்த வேண்டும்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார்:-

நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றாலும் சுமார் 400 நாட்களுக்கு மேலாக வழக்கில் ஈடுபட்டுள்ள 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்குபட்ட மக்கள், தங்கள் தொகுதி பிரச்சினையை கூற பிரதிநிதியின்றி தொகுதி வளர்ச்சி குறித்து சட்டமன்றத்தில் தங்களை தேவைகளை கூறும் உறுப்பினரின்றி குழம்பிய நிலையில் இருக்கின்றனர். மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிர்வாகம் சார்ந்த வழக்குகளையும் அவசர வழக்காக விசாரித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்