சேலம்,
தமிழக-கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை நீடிக்கிறது. மேலும் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தொடர் மழை காரணமாக நிரம்பி உள்ளன. இதன்காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது.
இந்த நிலையில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 9 ஆம் தேதி காலை 5 மணிக்கு 119 அடியை எட்டியது. அதனை தொடர்ந்து அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டுவதற்கு முன்பாக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி முதற்கட்டமாக 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது.
இதனையடுத்து இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 18,150 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. அதே நேரம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு 19,146 நீர் வந்துகொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணையில் தற்போது 91.88 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.