கோவை,
கோவை மாவட்டம் ஆவலப்பம்பட்டியை சேர்ந்தவர் கவியரசு (வயது 34). ஒண்டிப்புதூரில் இருந்து சித்ரா செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பஸ்சில் டிரைவராக முருகவேல்(40) உள்ளார்.
நேற்று முன்தினம் இரவில் அந்த அரசு பஸ் வழக்கம்போல் சித்ரா பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் ஒண்டிப்புதூர் நோக்கி சென்றது. கடைசி நிறுத்தத்தில் ஒரு மூதாட்டியை விட்டுவிட்டு அந்த பஸ் டெப்போவை நோக்கி புறப்பட தயாரானது. அப்போது, குடிபோதையில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பஸ்சில் ஏறி சிங்காநல்லூரை நோக்கி இயக்குமாறு கூறினர்.
அதற்கு பணி நேரம் முடிந்துவிட்டதால் பஸ் டெப்போவுக்கு செல்கிறது, எனவே கீழே இறங்குங்கள் என்று கண்டக்டர் கூறினார். இதை பொருட்படுத்தாத அந்த வாலிபர்கள், தாங்கள் சொல்கிற இடத்திற்கு பஸ்சை இயக்க சொல்லி அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த டிரைவர் உடனடியாக தானியங்கி கதவை மூடிவிட்டு, இப்போது போலீஸ் நிலையத்திற்கு பஸ்சை ஓட்டி செல்கிறேன், அங்கு வந்து பேசிக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு பஸ்சை இயக்க தொடங்கினார்.
கத்திக்குத்து
இதனால் அந்த வாலிபர்கள் ஆத்திரம் அடைந்து, மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்டக்டர் கவியரசுவை குத்தினர். இதில் அவரது வலது கையில் கத்திகுத்து விழுந்தது.
இதை கண்ட டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு அவர்களை பிடிக்க வந்தார். அதற்குள் 3 பேரும் பஸ்சில் இருந்த அவசர வழியை உடைத்துக்கொண்டு வெளியே தப்பி ஓடினர். பின்னர் காயம் அடைந்த கண்டக்டரை டிரைவர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
போராட்டம்
இந்த சம்பவம் குறித்த தகவல் நேற்று அதிகாலையில் ஒண்டிப்புதூர் டெப்போவில் உள்ள அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு பரவியது. அவர்கள் கண்டக்டரை கத்தியால் குத்திய வாலிபர்களை கைது செய்யும் வரை பஸ்களை டெப்போவில் இருந்து எடுக்க மாட்டோம் என்றுக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையில் கண்டக்டரை கத்தியால் குத்திய அஜித்(24) மற்றும் இருகூரை சேர்ந்த சூர்யா(19) ஆகிய 2 பேரை சிங்காநல்லூர் போலீசார் கைது செய்தனர். நீலிக்கோணாம்பாளையத்தை சேர்ந்த மனோஜ் (23) என்பவரை வலைவீசி தேடிவருகின்றனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.