சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த 2017-ம் ஆண்டு நடத்திய குரூப்- 2ஏ தேர்வில் ராமேசுவரம் மையத்தில் எழுதிய 42 தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு அதிக மதிப்பெண்கள் பெற்றதாக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் சி.பி. சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டம் அண்ணாமலை நகரை சேர்ந்த வேல்முருகன் (வயது 30) சிக்கினார். இவர் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய தனது சகோதரர் சித்தாண்டி உதவியால் முறைகேடாக தேர்வு எழுதி 285 மதிப்பெண்கள் பெற்று 8-வது இடத்தில் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் அவர் காரைக்குடி மாவட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார்.
இதே போன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த போலீஸ்காரர் முத்துவின் மனைவி ஜெயராணியும் (30) குறுக்கு வழியில் தேர்வு எழுதி மாட்டிக்கொண்டார். அவர் 276 மதிப்பெண்கள் பெற்று 21-வது இடத்தை பிடித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார். அவர்கள் இருவரும் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 1-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் அரசு ஊழியர்களான வேல்முருகன், ஜெயராணி ஆகிய 2 பேரும் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி நேற்று பிறப்பித்தார்.