தமிழக செய்திகள்

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த 3 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கரூர்

தலைமை கணக்காளர்

கரூர் மாவட்டம் தாந்தோணி மலை வாஞ்சிநாதன் நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 65). இவர் அப்பகுதியில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெராக்ஸ் கடைக்கு வந்த காளியப்பனூர் அருக்கம்பாளையம் ரோட்டில் வசித்து வரும் ரெங்கநாதன் என்பவர் கருப்பண்ணனிடம் தான் தெற்கு ரயில்வேயில் தலைமை கணக்காளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றதாக கூறியதுடன் தன்னால் ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என கூறியுள்ளார். மேலும் தனது மகள் ஆனந்தி மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த ரமேஷ் (39) என்பவரையும் கருப்பண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

3 பேர் மீது வழக்கு

இதையடுத்து கருப்பண்ணன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 42 பேர்களிடமிருந்து ரூ.2 கோடியே 7 லட்சத்தை பெற்று ரெங்கநாதனிடம் கொடுத்து வேலை வாங்கி தருமாறு கூறியுள்ளார். இந்நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட ரெங்கநாதன் வேலை ஏதும் வாங்கித்தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கருப்பண்ணன் ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக கூறி ஏமாற்றி மோசடி செய்த ரெங்கநாதன் மற்றும் ஆனந்தி, ரமேஷ் ஆகிய 3 பேர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பியூலா ஞான வசந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.