சென்னை,
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில், கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 26-ந் தேதி மேலும் பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பின் போது, சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. இது முடிவெட்டும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைந்தது.
தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றனர்
ஏற்கனவே, கொரோனா முதல் அலையின் போதும், சலூன் கடைகள் பல மாதங்களாக அடைக்கப்பட்டு முடிவெட்டும் தொழிலாளிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில், மீண்டும் ஏப்ரல் 26-ந் தேதி முதல் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சலூன் கடை உரிமையாளர்கள் பெரும் சிக்கலில் தவித்தனர்.
சென்னையை பொறுத்தவரையில் இங்குள்ள பெரும்பாலான பெரிய சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களில் வட மாநிலங்களை சேர்ந்த முடிவெட்டும் தொழிலாளர்களே வேலை செய்து வந்த நிலையில், சலூன் கடைகளை திறக்க தடை விதித்த உடன், கடை உரிமையாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து விட்டனர்.
கடை உரிமையாளர்கள் தவிப்பு
இந்த நிலையில், நாளை (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நேற்றும், இன்றும் மட்டும் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், பெரும்பாலான முடி வெட்டும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு சென்றுவிட்டதால் பல பெரிய சலூன் கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.
ஒரு சில பெரிய சலூன் கடைகள் மட்டுமே திறந்து இருந்த நிலையில், அங்கும் குறைந்த அளவிலான தொழிலாளர்களே இருந்ததால் முடி வெட்ட வரும் வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்ட முடியாமல், கடை உரிமையாளர்கள் தவித்தனர். ஒருவர் அல்லது இருவர் அமர்ந்து முடிவெட்டும் கடைகள் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு முடி வெட்டப்பட்டது. எனினும், எதிர்பார்த்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் கடைக்கு வரவில்லை.
நிவாரணம் வழங்க வேண்டும்
முழு ஊரடங்கு பாதிப்பு குறித்து எழும்பூரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் யுவராஜ் கூறியதாவது:-
தற்போது, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2 நாட்கள் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது ஓரளவு நிம்மதியாக உள்ளது. எனினும், முழு ஊரடங்கால் மீண்டும் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், ஊருக்கே அது தான் நிலைமை என்னும் போது வேறு வழியில்லை. எங்களை போன்றவர்களுக்கு அன்றாடம் வேலை பார்த்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும். இந்த நிலையில், மீண்டும் ஒரு ஊரடங்கு என்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தான் உள்ளது. எனவே, எங்களை போன்றவர்களுக்கு அரசு ஏதாவது நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.