புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். 5 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
104 பேருக்கு தொற்று
புதுச்சேரியில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் 5 ஆயிரத்து 950 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரத்து 331 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் தற்போது 170 பேர் மருத்துவமனைகளிலும், 752 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் 922 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரியில் நேற்று 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர்.
2 பேர் பலி
புதுச்சேரியில் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அதாவது புதுச்சேரி ஜிப்மரில் லாஸ்பேட்டையை சேர்ந்த 58 வயது பெண், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் நல்லம்பல் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோர் பலியாகி உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரியில் பலியானோர் 1.49 சதவீதமாகவும், குணமடைந்தோர் 97.75 சதவீதமாகவும் உள்ளது. புதுச்சேரியில் கடந்த சில நாட் களாக பாதிப்பு எண்ணிக்கை 100-க்கு கீழ் பதிவாகி வந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பாதிப்பு 100-க்கும் அதிகமாக பதிவாகி வருவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
5 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை
புதுவையில் நேற்று சுகாதார பணியாளர்கள் 32 பேரும், முன்கள பணியாளர்கள் 2 பேரும், பொதுமக்கள் 7,664 பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். புதுவையில் இதுவரை 6 லட்சத்து 76 ஆயிரத்து 356 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதித்த 5 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கொரோனா பாதித்த தாய் ஒருவரும், சந்தேகத்தின் பேரில் ஒரு குழந்தையும் சிகிச்சை பெற்று வருகிறது.