சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசிகள் போட பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருவதால் சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 29 லட்சத்து 22 ஆயிரத்து 160 தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் தடுப்பூசிகள் தட்டுப்பாடின்றி கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் இருந்து விமானத்தில் 41பெட்டிகளில் 2 லட்சத்து 21ஆயிரத்து 90 கோவாக்சின் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தன. விமான நிலையத்தில் இருந்து அவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில அரசு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கு இன்றே பிரித்து அளிக்கப்பட உள்ளது.