சென்னை ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த போலீஸ்காரர்களான பாலாஜி (வயது 32) மற்றும் பரித் ராஜ் (29) ஆகியோர் கடந்த 28-ந்தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பின்னர் கொருக்குப்பேட்டை மணலி சாலையில் உள்ள பா.ஜ.க. பிரமுகர் தேவி வீட்டுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டு உள்ள இரவு ரோந்து பதிவு புத்தகத்தில் கையெழுத்திட சென்றனர். அப்போது தேவியின் கணவர் விஜயகுமார், போலீசாரிடம் நள்ளிரவில் ஏன் குடித்துவிட்டு என் வீட்டுக்கு வந்தீர்கள்? என கேட்டார். இதனால் போலீஸ்காரர்கள் இருவரும் விஜயகுமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை விஜயகுமார் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோ பதிவுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டியிடம் புகார் செய்தார். விசாரணையில் போலீஸ்காரர்கள் இருவரும் குடிபோதையில் ரோந்து பணியில் ஈடுபட்டதுடன், விஜயகுமாரிடம் வாக்குவாதம் செய்ததும் உறுதியானது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் பாலாஜி, பரித் ராஜ் இருவரையும் பணியிடை நீக்கம் செய்து துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.