தமிழக செய்திகள்

மீன் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை சாவு

கருங்கல் அருகே பக்கத்து வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

கருங்கல்:

கருங்கல் அருகே பக்கத்து வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

2 வயது குழந்தை

கருங்கல் அருகே உள்ள கொடிவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் வினு (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி டயானா ஸ்டான்லி. இவர்களுடைய 2-வது மகன் சாண்டினோ (2).

சம்பவத்தன்று டயானா ஸ்டான்லி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். வழக்கமாக சாண்டினோ பக்கத்து வீட்டில் உள்ள ஒருவரின் வீட்டுக்கு விளையாட செல்வது வழக்கமாம்.

அதன்படி நேற்று குழந்தை சாண்டினோ விளையாட சென்றது. இதற்கிடையே சமையல் வேலையை முடித்த டயானா ஸ்டான்லி குழந்தையை தேடி பக்கத்து வீட்டுக்கு சென்றார்.

மீன்தொட்டியில் பிணமாக மீட்பு

அங்கு குழந்தையை காணவில்லை. ஆனால் வீட்டு வளாகத்தில் உள்ள ஒரு மீன் தொட்டியில் சாண்டினோ அசைவற்ற நிலையில் கிடந்தான். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டயானா ஸ்டான்லி கதறி அழுதபடி குழந்தையை மீட்டார். பின்னர் பதற்றத்துடன் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாண்டினோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை பிணமாக கிடந்த மீன்தொட்டியானது சிமெண்டால் கட்டப்பட்டிருந்தது. மேற்புறத்தில் வலை விரிக்கப்பட்டிருந்தது. இதனால் குழந்தை மீன்தொட்டியை எட்டி பார்த்த போது தவறி விழுந்து வலையில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.