சென்னை,
ஜம்மு காஷ்மீர் ராஜோரி அருகே ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிசண்டையில் 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதலின் போது சுபேதார் ராஜேந்திர பிரசாத், ரைபிள்மேன் மனோஜ் குமார் மற்றும் ரைபிள்மேன் லக்ஷ்மணன் டி ஆகியோர் உயிரிழந்தனர். வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த முயன்ற 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். உயிரிழந்த ராணுவ வீரர்களில் லட்சுமணன் மதுரை புதுப்பட்டியை சேர்ந்தவர் ஆவார்.
இந்த நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், " வீர மரணம் எய்திய ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். வீர மரணம் எய்திய 3 ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி, வீர வணக்கத்தை சமர்பிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.