தமிழக செய்திகள்

சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்பு

சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளின் கவுன்சிலர் பதவிக்காக 2 ஆயிரத்து 670 பேர் தேர்தல் களத்தில் போட்டியிட்டனர். இந்த நிலையில் இந்த தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 22-ந் தேதி அறிவிக்கப்பட்டது.

இதில் தி.மு.க. வேட்பாளர்கள் 153 வார்டிலும், அ.தி.மு.க. 15 வார்டிலும், காங்கிரஸ் கட்சி 13 வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தை கட்சி தலா 4 வார்டிலும், ம.தி.மு.க. 2 வார்டிலும், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பா.ஜ.க., அ.ம.மு.க. தலா ஒரு வார்டிலும், சுயேச்சையகள் 5 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் ஆவர்.

பதவி ஏற்பு

இந்த 200 வெற்றி வேட்பாளர்களும் இன்று (புதன்கிழமை) தங்களது வார்டுகளின் கவுன்சிலர்களாக பதவி ஏற்க உள்ளனர். இதற்காக சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, வெற்றி பெற்றவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற வேட்பாளரின் பெயரை மன்ற செயலாளர் அழைப்பார். இதையடுத்து அந்த வேட்பாளர் மேடைக்கு வந்து தங்களது வார்டு கவுன்சிலர் பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என உறுதிமொழி எடுப்பார். தொடர்ந்து அங்குள்ள பதிவேட்டில் உறுதிமொழி எடுத்த கவுன்சிலர் மற்றும் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கையெழுத்திடுவர்.

மேயர் பதவி

இந்த நிலையில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பதவி ஏற்ற கவுன்சிலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயரை தேர்ந்தெடுக்க உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் மற்றும் துணை மேயர் பதவி ஏற்ற பின்னர் மன்ற கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை