அரியலூர் மாவட்டம், தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் தா.பழூர் முதல் நிலை ஊராட்சியில் 5-வது வார்டு மேல தெருவை சேர்ந்த வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து வடியாமல் தேங்கியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அப்பகுதியில் வசித்த மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு தா.பழூர் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். தகவல் அறிந்து முகாமிற்கு வந்த வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் மழை நீர் வடிவதற்கு தடையாக உள்ள இடங்களை ஆய்வு செய்து அங்கிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கான வாய்ப்புகளை ஏற்பாடு செய்தனர். முகாமில் தங்க வைக்கப்பட்ட அனைவருக்கும் இரவு உணவு மற்றும் பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா முகாமில் தங்கி இறந்தவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மழைநீர் வடிவதற்கு தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனடியாக வடிகால் அமைப்புகளை ஏற்படுத்த வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிகமாக அப்பகுதியில் தேங்கியிருக்கும் தண்ணீர் வடிவதற்காக வாய்க்கால் ஏற்பாடு செய்து தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து பகுதியில் உள்ள மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம், ஒன்றியக்குழு தலைவர் மகாலஷ்மி வீரமணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் உள்பட பலர் உடனிருந்தனர்.