இடிகரை,
கோவையை அடுத்த வீரபாண்டி அருகே பிரஸ் காலனி பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது வழிபாட்டு தலங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதற்கிடையே ஓம்சக்தி நகரில் ஓம்சக்தி கோவில் அருகே இஸ்லாமியர்கள் தற்காலிக செட் அமைக்க இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனாலும் முடிவு ஏற்பட வில்லை.
இந்த நிலையில் நேற்று தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரமடையில் இருந்து பெரியநாயக்கன்பாளையத்திற்கு பிரசாரம் செய்ய வந்தார். வழியில் பிரஸ்காலனி அருகே முதல்- அமைச்சரை சந்தித்து, கோரிக்கை மனு கொடுக்க ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, விஸ்வஇந்து பரிஷத், மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் திரண்டனர். அதற்கு போலீசார் அனுமதி தரவில்லை.
ஆனாலும் அங்கு இந்து அமைப்பினர் திரண்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் நின்றனர். இந்த நிலையில் முதல்- அமைச்சரின் வாகனம் சிறிது நேரத்தில் வரும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போதும் அவர்கள் கலைந்து செல்லாமல், முதல்- அமைச்சரின் வாகனத்தை முற்றுகையிட இந்து முன்னணியை சேர்ந்த பாலன், தியாகராஜன், ஜெய் கார்த்திக், முருகன், பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன் உள்பட கட்சி நிர்வாகிகள் திரண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 240 பேரையும் போலீசார் கைது செய்து வீரபாண்டி பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.