தமிழக செய்திகள்

திருநெல்வேலியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பெயரில், வீரவநல்லூர் அருகே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் பகுதியில் 25 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் நோக்கில் மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்ட போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்

25 கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது

அதன்படி சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வீரவநல்லூர் அருகே தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, தெற்கு வீரவநல்லூர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சங்கர்கணேஷ் (வயது 36), மகாராஜன்(37) மற்றும் ராகுல்(25) ஆகிய பேரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள்

மேலும் கைது செய்யப்பட்டவர்களில் சங்கர்கணேஷ்(36) மற்றும் மகாராஜன்(37) ஆகிய 2 பேரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பதும், வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக வீரவநல்லூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் நேரடியாக விசாரணையை மேற்பார்வையிட்டு, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர் நடவடிக்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீதும், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீதும் மாவட்ட போலீசார் தொடர்ந்து கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT